Top News

முஸ்லிம் காங்கிரஸ் என்னை, இடைநிறுத்தியது அநீதியான செயல் - சாபி ரஹீம்


கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் நலன்கருதியும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவுமே தான், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் இம்முறை, கம்பஹா மாவட்டத்தில் களமிறங்குவதாக, முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,


இம்முறை கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்துபோகக் கூடும். சஜித் அணியில் கேட்டு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது.


கம்பஹா மாவட்டத்தில் பல தடவைகள் தேர்தலில் போட்டியிட்டவன் என்றவகையிலும், இம்முறை களநிலவரம் வேறுபட்டதாக காணப்படுகின்றமையாலும் முஸ்லிம் காங்கிரஸ் சஜித் அணியில் வாக்குக் கேட்பது பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.


கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு 33,700 வாக்குகளை பெற முடிந்தது.


இம்முறை நான் ஐக்கிய தேசியக் கட்சியில் யானைச் சின்னத்தில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறேன். என்னால் வெற்றியீட்ட முடியுமென்று நம்புகிறேன். இம்முறை கம்பஹா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் மலே சமூகத்தைச் சேர்ந்த மற்றுமொருவரும் போட்டியிடுகிறார்.


எனினும் முஸ்லிம் காங்கிரஸிற்காக கம்பஹா மாவட்டத்தில் பல தியாகங்ளைச் செய்த நான் தற்போது கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளேன்.


கட்சியின் தலைவருக்கு யாப்பில் உள்ள அதிகாரத்தின்படி என்னை இடைநிறுத்தியுள்ளதாக கூறுகிறார்கள். எனினும் இதுவரை நான் அந்த யாப்பை பார்த்ததில்லை.


சஜித் பிரேமதாசா தனிகட்சி நிறுவி, அதன் தலைவராகி, தனியே தேர்தலில் குதித்துள்ளார். எனினும் அவரை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கவில்லை. இப்படியிருக்கையில் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து என்னை நீக்கியமை அநீதியானதாகும்.


நான் கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் நலன்கருதியே, இம்முறை தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்றார்.

Post a Comment

Previous Post Next Post