- இன்றையதினம் 11 பேர் அடையாளம்
- 17 தனிமைப்படுத்தல் நிலையங்கள் 30 வெளநாட்டவர் உள்ளிட்ட 2,738 பேர்
- இன்று புத்தகயாவிலிருந்து 97 பேர் நாடு திரும்பினர்
- இலங்கை வந்து தனிமைப்படுத்தப்படாதவர்களுக்கு அழைப்பு
- அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் வெளியில் செல்லலாம்
- நிறுவன அடையாள அட்டைகளை பயன்படுத்தவும்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
இன்றையதினம் (20) மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
தற்போது இலங்கையிலுள்ள 17 தனிமைப்படுத்தல் மையங்களில் 2,738 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 30 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புத்தகயா வழிபாட்டை அடுத்து இன்றைய தினம் (20) UL122 எனும் விமானத்தில் இந்தியாவின் சென்னையிலிருந்து நாடு திரும்பிய 97 பேர் தனிமைப்படுத்தல் செயல்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எவ்வழி ஊடாகவேனும் இலங்கைக்கு வந்து, தற்போது தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்படாதிருக்கின்ற நபர்களை தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுமாறு, கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று (20) மாலை 6.00 மணி முதல் திங்கட்கிழமை (23) 6.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் தமது கடமைகளில் ஈடுபடுபவர்கள், தத்தமது அடையாளங்களை உறுதிப்படுத்தி தங்களது அலுவலக அடையாள அட்டைகளை காண்பிக்கலாம் என, செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment