உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா நோயினால் மரணிப்போரை அடக்கவும் முடியும், எரிக்கவும் முடியுமென இரு தெரிவுகளை வழங்கியுள்ள நிலையில், இலங்கையிலும் கொரோனா வைரஸால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை வலியுறுத்திக் கேட்டுள்ளது.
இது விடயமாக மேற்படி சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி, செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸிர்கனி ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (14) கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"தற்போது சர்வதேச நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இலங்கை திருநாட்டையும் விட்டுவைக்கவில்லை. இந்நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசு காட்டிவரும் அசுர வேகத்தை அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வெகுவாக பாராட்டுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்து பாதுகாப்புப் படையினரும் சுகாதாரத் துறை பணியாளர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவது போற்றத்தக்க விலை மதிப்பற்ற செயற்பாடாகும்.
இலங்கைத் திருநாடு, அந்நாட்டில் வாழும் சகல சமயத்தவரையும், சமூகங்களையும் கண்ணியத்துடன் நடாத்திவரும் பாரம்பரியமிக்க நாடாகும். முஸ்லிம்கள் புராதன காலம் தொட்டு அவர்களது சமய நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் எவ்வித தங்குதடையுமின்றி மிகச் சிறப்பாக இந் நாட்டில் பேணி வருகின்றனர். எந்த அரசும் அரசாங்கமும் ஒருபோதும் அதற்குத் தடையாக இருந்ததில்லை.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை மூன்று முஸ்லிம்கள் இறந்துள்ளனர். அவர்கள் தங்களது சமய நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு அப்பால் எரிக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளனர். உண்மையில் இச் செயற்பாடு இந்நாட்டிலுள்ள சகல முஸ்லிம்களதும் மனங்களையும் உணர்வுகளையும் மிகக் கடுமமையாக பாதித்துள்ளது. இதனால் அரசாங்கத்தின் மீது பாரதூரமான அதிருப்தியையும், நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்திவருகின்றனர்.
உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா போன்ற கொடிய நோயினால் மரணிப்போரை அடக்கவும் முடியும், எரிக்கவும் முடியுமென இரு தெரிவுகளை வழங்கியுள்ள நிலையில் சர்வதேச அளவில் 180 நாடுகள் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளன. இச்சூழ்நிலையில் மேன்மைதங்கிய இலங்கை ஜனாதிபதி அவர்கள் இந்நாட்டில் வாழும் சகல சமயத்தவர்களினதும், சமூகங்களினதும் தனித்துவத்தையும், நம்பிக்கையையும், உணர்வுகளையும் மதிக்க வேண்டுமெனவும், கொரோனா போன்ற வைரஸ் தாக்கத்தினால் மரணிக்கும் முஸ்லிம்களது உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றோம்" என்று அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வலியுறுத்தியுள்ளது.
-அஸ்லம் எஸ்.மௌலானா
Post a Comment