(ஆர்.யசி)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடே பாரிய நெருக்கடியில் உள்ள நிலையில் பிணங்களை வைத்து மதவாத, இனவாத அரசியலை செய்ய எவரும் முயற்சிக்க வேண்டாம். இஸ்லாமிய அரசியல்வாதிகள் நிலைமைகளை புரிந்து கொண்ட செயற்படுங்கள் என்கிறார் அதுரலிய ரதன தேரர். நாடே கொரோனா தொற்றுநோய் குறித்த அச்சத்தில் இருக்கும் இவ்வேளையில் மத சம்பிரதாய முறைகளில் உடல்களை நல்லடக்கம் செய்ய முடியா எனவும் அவர் கூறுகின்றார்.
இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் ஜனாஸா இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்து தனது கருத்தை முன்வைக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் முழு உலகையுமே பலவீனப்படுத்தியுள்ளது. இலங்கையிலும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவுகின்றது. இருவர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமான தொற்றுநோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையும் கட்டாயமும் எமக்குள்ளது. நாட்டில் இனவாதம், மதவாதம் எதையும் தூண்டிவிடாது தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து புரிந்துணர்வுடன் அரசாங்கம் மற்றும் வைத்தியத்துறையினர் முன்வைக்கும் அறிவுரைகளை பின்பற்றி எமது பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டியது கடமையாகும்.
இவ்வாறிருக்கையில் இரண்டாவதாக நீர்கொழும்பு பிரதேசத்தில் உயிரிழந்த முஸ்லிம் நபர் குறித்து முன்னாள் அமைச்சர் ஹக்கீம் முன்வைத்து வருகின்ற கருத்துக்கள் மிகவும் மோசமானதாக அமைந்துள்ளன. இஸ்லாமிய மத சம்பிரதாயங்களுக்கு அமைய அவரது உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என கூறுகின்றார்.
இப்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் மீது கொரோனா வைரஸ் தொற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்ற நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா? அவ்வாறான சூழ்நிலையிலா நாம் இருக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
அதுமட்டும் அல்ல இப்போதுள்ள சூழலில் இவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு முஸ்லிம், சிங்களம் என மக்கள் பிரிவினைவாதத்தை கையில் எடுக்கவும் முடியாது. அவ்வாறு இருக்கையில் மக்கள் பிரதிநிதி ஒருவர் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது குறித்து நாம் எமது கண்டனத்தையும் அதிருப்தியையையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பாக மத சம்ரதாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றால் அதனை எப்போதும் எந்த இடத்திலும் முன்னெடுக்க முடியும். ஆனால் இப்போது இருக்கும் சூழலில் நோயற்ற சூழலை உருவாக்கிக்கொள்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் மற்றும் மருத்துவத்துறையினர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தி அரசாங்கம் தடைகளின்றி பயணிக்க இடமளிக்க வேண்டும். அதைவிடுத்து பிணங்களை வைத்து அரசியல் செய்யவோ, சந்தர்ப்ப சூழ்நிலைகளை பார்த்து இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்ட வேண்டாம் என அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
புத்திசாலி முஸ்லிம் மக்கள் ககூட இப்போதுள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடாக ஒன்றிணைந்து பயணிக்கின்ற நிலையில் அரசியல் சுய இலாபங்களுக்காக இஸ்லாமிய அரசியல் வாதிகள் மதவாதத்தை தூண்ட வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
Post a Comment