Top News

காதர் மஸ்தானுக்கு கொரோனா உண்மையில் என்ன நடந்தது?


சுய விருப்பின் பெயரிலேயே தனிமைப்படுத்தலுக்கு எம்மை உட்படுத்தினோம். இந் நிலையில் நாம் சுகாதார பிரிவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போலி தகவல் பரப்புவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். 


அவரால் இன்று 10.04.2020 வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த மார்ச் 18ஆம் திகதி மன்னார் தாராபுரத்தில் இடம்பெற்ற மரண இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொண்டிருந்தேன். இந்த சடங்கில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபரொருவர் புத்தளத்திலிருந்து வந்து கலந்து கொண்டிருந்தார் எனவும் அவருக்கு கொரொனா தொற்று இருப்பதாக ஏப்ரல் 7ஆம் திகதி உறுதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.

குறித்த மரணச் சடங்கில் நானும் எனது சகோதரரும் கலந்துகொண்டிருந்தோம். இச்சம்பவம் நடைபெற்று இருபது நாட்கள் கடந்திருந்த நிலையில் மேற்படி நபருக்கு கொரொனா தொற்று உள்ளதை அறிந்துகொண்ட நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு விடயத்தை தெரியப்படுத்தினேன்

அதனடிப்படையில் என்னிடம் விபரங்களைக் கேட்டறிந்த சுகாதாரப் பரிசோதகர் மற்றும் அதிகாரிகள் எமக்கு கொரோனா தெற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை என்பதை உறுதி செய்ததோடு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர் என்பதோடு தனிமைப்படுதலுக்கான ஆலோசனைகள் எதையும் வழங்கவில்லை. 

இருப்பினும் நானும் எனது சகோதரரரும் எமது குடும்பத்தினர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட நாமே சுய தனிமைப்படுத்தலுக்கு எம்மை உட்படுத்திக்கொண்டுள்ளோம். இதுவரையில் நாம் எவ்வகையிலும் வெளிச் செல்லவில்லை. என்னுடையதும் குடும்பத்தினரதும் பொதுமக்களினதும் பாதுகாப்பைக் கருதியே இவ்வாறு செயற்படுகின்றேன்.

எனினும் சில ஊடகங்கள் எனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அதிகாரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன் எனவும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதை நான் அறிகின்றேன். 


இவை மிக மனவருத்தத்திற்குரிய பொய்யான தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திகளாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இத்தகைய செயற்பாடுகளை என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ள சில சக்திகள் மக்களிடமிருந்து என்னை அந்நியப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கின்றன என நான் கருதுகின்றேன் எனவும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.






Post a Comment

Previous Post Next Post