Top News

சாதாரணதரப் பரீட்சை மாணவர்களுக்கு இலவச தொலைபேசி சேவை அறிமுகம்




( மினுவாங்கொடை நிருபர் )


இவ்வாண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, வீட்டிலிருந்தவாறே தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர, 1377 எனும் இலக்கம் மூலமாக விசேட தொலைபேசிச் சேவையை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஒவ்வொரு பாடம் தொடர்பிலும் எழுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு, இவ்விசேட இலவச தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க, டயலொக் நிறுவனத்தின் பிரதான பங்களிப்புடன், தபால் மற்றும் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் மொபிடெல், எயார்டெல், ஹட்ச், ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் லங்கா பெல் ஆகிய தொலைபேசிச் சேவை வழங்குநர்கள் இணைந்து இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
பெற்றோர் எந்தவொரு வலையமைப்பின் ஊடாகவும், 1377 எனும் இலக்கத்தை அழைப்பதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
இந்தச் சேவைக்கு, தொலைபேசிக் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது என்பதோடு, சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இச்சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு பாடம் தொடர்பிலும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இதற்காகத் தொடர்புபடுத்தப்படுவார்கள் என்பதோடு, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தாய்மொழி தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்கள் தொடர்பிலான எந்தவொரு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இதன் மூலம் பதில்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


( ஐ. ஏ. காதிர் கான் )

Post a Comment

Previous Post Next Post