தாம் விரும்பும் முஸ்லிம் கட்சி யாரை ஆதரித்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும்
எதிர்த்தால் தாமும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதுமான அரசியலை இலங்கை முஸ்லிம் சமூகம் மாற்றாத வரை சமூகத்துக்கான சிறந்த அரசியலை காண முடியாது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை முஸ்லிம்களிடம் எப்போதும் ஒரு பழக்கம் உள்ளது. தாம் விரும்பும் முஸ்லிம் கட்சி முட்டுக்கொடுக்கும் ஆட்சி என்ன அநியாயத்தை தமக்கு செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள். முட்டுக்கொடுக்கும் தம் கட்சிக்கெதிராக எழுத மாட்டார்கள், பேசமாட்டார்கள். அதே நேரம் சிங்கள அரச தலைமையையும் அதில் உள்ள யாராவது சிங்கள அமைச்சரையும் ஏசிவிட்டு தாம் ஓட்டு போடும் முஸ்லிம் கட்சி அமைச்சர்களை நைசாக காப்பாற்றி விடுவார்கள். நீங்களும் அமைச்சராக இருக்கும் போதுதானே இது நடந்தது என்பதால் இனி உங்களுக்கு எமது வாக்கு இல்லை என எவனும் சொல்ல மாட்டான்.
அதே நேரம் தாம் ஓட்டுப்போடும் கட்சி அங்கம் வகிக்காத ஆட்சியில் ஏதும் துன்பங்கள் வந்தால் அந்த ஆட்சியில் அமைச்சராக இல்லாமல் வெறுமனே ஆதரவு வழங்கும் சாதாரண முஸ்லிம் அரசியல்வாதியை ஏசுவர். அந்த ஆட்சியில் இருக்க வெட்கம் இல்லையா? ஏன் அரசாங்கத்திடம் உங்களால் பேச முடியாது என்று மக்கள் அதிகாரம் அற்ற அந்த அரசியல்வாதியிடம் கேள்வி கேட்பர். ஆனால் தாம் ஆதரிக்கும் கட்சியின் அமைச்சர் அந்த ஆட்சியில் இருந்தால் கைகட்டி வாய் மூடியிருப்பர்.
2000ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி மட்டுமே முஸ்லிம்கள் மத்தியில் ஓட்டு பெற்ற கட்சியாக இருந்தது. அக்கட்சி சந்திரிக்காவுக்கு முட்டு கொடுத்த போது முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் அதே ஆண்டில் அரச ஆதரவுடன் மாவனல்லை மூன்று நாட்களாக தாக்கப்பட்ட போது முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசை பார்த்து உங்கட ஆட்சிதானே, தடுக்க முடியாதா என கேட்கவில்லை.
பின்னர் சந்திரிக்கா அரசை கலைத்து 2001ல் தேர்தல் நடத்திய போது மு. கா, ரணிலுக்கு முட்டுக்கொடுத்து ஐ தே க ஆட்சியை கொண்டுவந்தது. அதையும் சமூகம் ஏற்றுக்கொண்டது. காரணம் மு. கா ஆதரிக்கும் அரசு என்பதால்.
அந்த ஆட்சியில் இராணுவம், பொலிஸ் பார்த்திருக்க மூதூர் தாக்கப்பட்டது. அப்போது ஹக்கீம் மூதூரில் மாட்டிக்கொண்டிருந்தார்.
பிரதமர் ரணில் மூதூருக்கு வந்து முஸ்லிம்களின் பரிதாப நிலையை பார்க்காவிட்டால் தான் மூதூரிலிருந்து வெளியேற போவதில்லை என கர்ஜித்தார். ரணில் கண்டு கொள்ளவேயில்லை. அதனால் ஹக்கீம் மூதூரை அப்படியே விட்டு கொழும்புக்கு ஓடிவிட்டார். இதற்காக பெரும்பான்மை முஸ்லிம்கள் ரணிலையோ, ஹக்கீமையோ பெரிதாக எதிர்க்கவில்லை. சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் சிலர் எதிர்த்தனர்.
அதே போல் 2002ல் வாழைச்சேனையில் வைத்து இரண்டு முஸ்லிம்கள் தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு அரசின் இராணுவம், பொலிஸ், நீதிவான் பார்த்திருக்க புலிகளால் கொல்லப்பட்ட ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது பிரதமராக ரணில் இருந்தார். ஆனாலும் சமூகம் ரணிலுக்கும் ஹக்கீமுக்கும் எதிராக கிளர்ந்தெழவில்லை.
அதே ரணில் 2005ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது ஹக்கீம் ரணிலை ஆதரித்தார். 2004ல் ஹக்கீமிடமிருந்து பிரிந்த அதாவுள்ளா, ரிசாத் , உலமா கட்சி போன்றோர் மஹிந்தவை ஆதரித்தனர்.
ஆனாலும் பெரும்பாலான முஸ்லிம்கள், முஸ்லிம் காங்கிரஸ் பேச்சை கேட்டு ரணிலுக்கே ஓட்டு போட்டனர். கல்முனை தொடக்கம் மூதூர் வரை உள்ள முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளில் ரணில் வென்றார்.
இவற்றின் மூலம் புரிவது என்னவென்றால் முஸ்லிம்களை பொறுத்தவரை அரசியலில் சொந்தமாக சுயமாக சிந்திப்பவர்கள் குறைவு. மாற்று அரசியல் கருத்துக்களை கேட்பதுமில்லை. தமக்கு பிடித்த கட்சி யாருக்கு ஆதரவளிக்கிறதோ அதற்கு கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடுவார்கள்.
இதே போல் 2005ல் ரணிலுக்கு ஓட்டுப்போட்ட முஸ்லிம்கள் 2006ல் ஹக்கீம் மஹிந்த பக்கம் பல்ட்டி அடித்து அமைச்சரான போது அதையும் சமூகம் ஆதரித்தது. உங்களுக்கு வெட்கமில்லையா என மு. கா தீவிர ஆதரவாளன் எவரும் ஹக்கீமிடம் கேட்கவில்லை.
அதே போல் தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினை 2012ல் ஏற்பட்ட போது மூன்று காங்கிரஸ்களும் மஹிந்த அரசுடன் இருந்தும் முஸ்லிம்கள் மஹிந்தவுக்கு ஏசினார்களே தவிர அவருடன் அமைச்சராக இருக்கும் தமது அமைச்சர்களுக்கெதிராக திரளவில்லை. எந்தளவுக்கு என்றால் 2012 கிழக்கு மாகாண சபை தேர்தலில் மஹிந்த அரசில் இருந்து கொண்டே அரசுக்கெதிராக பேசி இனவாதத்தை கட்டுப்படுத்த தமக்கு ஆதரவளியுங்கள் என கேட்டு பிரச்சாரம் செய்த போது இதில் உள்ள பொய், ஏமாற்றை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ளாமல் அரச சார்பு முஸ்லிம் கட்சிகளுக்கே கிழக்கு முஸ்லிம்கள் 95 வீதமானோர் வாக்களித்தனர்.
இனவாதிகளை கைது செய்யாத அரசை எதிர்க்கிறோம் என்ற செய்தியை நாம் சொல்ல வேண்டும் என்றால் அரச கட்சிக்கோ, அரசில் அமைச்சராக இருக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கோ வாக்களிக்காமல் எதிர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என உலமா கட்சி பிரச்சாரம் செய்தது. ஆனாலும் முஸ்லிம்கள் உலமா கட்சியின் கருத்தை ஏற்காமல் மஹிந்த அரசு சார்பு முஸ்லிம் கட்சிகளுக்கே வாக்களித்து அரசை பலப்படுத்தினர்.
இப்போதைய அரசை தமது முஸ்லிம் கட்சிகள் எதிர்க்கும் ஒரே காரணத்துக்காக எதிர்த்து சஜித்துக்கு சமூகம் வாக்களித்து இன்று செல்லாக்காசாக சமூகம் உள்ளது. தங்களை இந்த இக்கட்டுக்குள் தள்ளிய தமது முஸ்லிம் கட்சிகளை எதிர்ப்பவர்களை காணவில்லை. அதே வேளை வரும் தேர்தலில் வென்றால் அரசுக்கு மூன்றில் இரண்டு தேவைப்படும் என்பதால் தமது கட்சிகள் கோட்டா, மஹிந்த அரசில் இணைந்து அமைச்சராகுவோம் என சொல்வதையும் சமூகம் வெட்கமின்றி ஆர்வமாக பார்க்கிறது.
இவ்வாறான கண்மூடித்தனமான அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம் விழிக்காத வரை நமது சமூகத்துக்கு பயன்தரும் அரசியலை உருவாக்க முடியாது.
Mubarak Abdul Majeed
Post a Comment