Top News

அலிசாஹிர் மௌலானா, அமீரலி ஆகியோரும் என்னைப்போலவே தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர் - ஹிஸ்புல்லாஹ்.

எனது பல்கலைக்கழகத்தை பாதுகாக்கவே பாராளுமன்றத் தேர்தலில் வேண்டுமென்றே தோல்வியை தழுவியதாகவும் சில சமூக வலைத்தளங்களில் கூறப்படும் பிரசாரங்கள் முற்றிலும் பொய்யானவை என முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வேட்பாளரும் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியிலும் அதனைத்தொடர்ந்த நம்பிக்கையிலுமே பிரசாரத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ள அவர், தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தனது மூச்சு இருக்கும் வரையிலும் மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்குடா தொகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலே அவர் இதனை தெரிவித்தார். இணைப்பாளர் அஷ்ஷெய்க் ஹாரூன்(சஹ்வி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

யாராவது இந்த நாட்டில் தனது வெற்றியை விட்டுக்கொடுத்த வரலாறுகள் காணப்படுகின்றதா? சிறுபிள்ளைத்தனமான சந்தேகங்களை மக்கள் மத்தியில் விதைப்பவர்கள் எதை எதிர்பார்த்து இவ்வாறு பிரசாரம் செய்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் மிகவும் புத்திசாதுரியமான முறையில் தங்கள் வாக்குகளை அளித்ததால் வழமையாக வரவேண்டிய இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி இல்லாமல் ஆக்கப்பட்டார். உரிமைக்கென்று தமிழ்க்கூட்டமைப்புக்கும் அபிவிருத்திக்கென்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கென்றும் அவர்கள் வாக்களித்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, அமீரலி ஆகியோரும் என்னைப்போலவே தேர்தலில்தோல்வியடைந்துள்ளனர்.அவர்களது தோல்வியையும் நாங்கள் பெருந்துயரமாகவே கருத வேண்டும். சிரேஷ்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்த மாவட்டமாக மட்டக்களப்பு இப்போது காணப்படுகின்றது. எம்மைப்போல ஆளுமைகளின் தேவை அரசுக்கு வேண்டும் எனக்கருதினால் அதற்கான வாசலை இறைவன் தனது அதிகாரத்தினால் திறந்து வைப்பான்.

நான் கிழக்கு மாகாண ஆளுநராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராக அல்லது உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படலாம் என்று எனது ஆதரவாளர்கள் நம்பிக்கை கொண்டு வருகின்றனர். இந்த அரசு பயணிக்கும் பாதையை பொறுத்தே அதனைப் பெற்றுக்கொள்வதா?இல்லையா?என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.



எனக்கு அரசியல் அதிகாரம் வந்தாலும் வராவிட்டாலும் எனக்குரிய சுயாதீனமான அதிகாரங்களை பயன்படுத்தி எனது மூச்சு இருக்கும் வரை இந்த மக்களுக்காக சேவை செய்வேன் என்றார்.

Post a Comment

Previous Post Next Post