புத்தளம் மக்கள் எனக்கு வழங்கிய ஆணையை சரியாகப் பயன்படுத்தி, இன, மத, பிரதேச மற்றும் கட்சி பேதங்கள் எதுவுமின்றி எல்லோரையும் இணைத்துக்கொண்டு புத்தளத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவேன் என முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரில் அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நடந்து முடிந்த தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட புத்தளத்திலுள்ள அரசியல் பிரமுகர்கள் ஒன்றிணைந்து தராசு சின்னத்தில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டதன் பயனாக மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் புத்தளம் மாவட்டத்திலிருந்து சிறுபான்மை மக்களின் வாக்குகளால் நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறேன்.
என்னை தெரிவுசெய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த புத்தளம் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிச்சயமாக நிறைவேற்றுவேன். எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பிரித்துப்பார்த்து பணியாற்றப் போவதில்லை. இனவாதம், மதவாதம் மற்றும் பிரதேசவாதம் என்பனவற்றை களைந்து அனைவருக்கும் சமமாகவே பணிகளை முன்னெடுப்பேன். எனது அரசியல் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாகவே இருக்கும்.
தேர்தல் காலங்களில் எனக்கு எதிராக பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனது வெற்றியை தடுப்பதற்கு என்ன சூழ்ச்சிகளையெல்லாம் செய்ய முடியுமோ அவ்வாறான சூழ்ச்சிகளை செய்தார்கள். அவ்வாறானவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளனர். எனினும் எனக்கு சூழ்ச்சிகள் செய்தார்கள் என்பதற்காக ஒருபோதும் பழிவாங்கும் அரசியலை செய்ய மாட்டேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை நான் ஒருபோது அனுபவிக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்
Post a Comment