Top News

தனது மகனுடன் தமிழ் பரீட்சை எழுதியவரே கல்வி அமைச்சின் புதிய, செயலாளர்


தனது மகனுடன் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய உபவேந்தர்!

மத்தேகொடை வித்தியாதீப மத்திய மகாவித்தியாலய சா.த. பரீட்சை நிலையத்திற்கு முன்னால் கடந்த 12ம் திகதி ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அந்நாளில் நடைபெற்றது க.பொ.த. சா.த. தமிழ்மொழி பரீட்சையாகும். மோட்டார் வண்டியிலிருந்து இறங்கி வந்தது தந்தை-மகன் இருவருமாகும். அவர்கள் இருவரில் ஒருவர் நுழைவாயில் பாதுகாப்பு அதிகாரியினால் நிறுத்தப்படுகின்றார்.

இது ஒரு பரீட்சை நிலையமாகும். உங்களுக்கு உள்ளே செல்வதற்கு அனுமதியில்லை. பரீட்சைக்கு தோற்றும் மகனை மாத்திரம் உள்ளே அனுமதிக்கலாம் எனக் கூறினார். அவர் அப்படிக் கூறியது பிள்ளைகள் அல்லாது பெற்றோர்கள் பரீட்சைக்குத் தோற்றுவது பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பதனாலாயிருக்க வேண்டும்.



ஆனால் தானும் அந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதாக அத் தந்தை தனது கையில் வைத்திருந்த அனுமதிப் பத்திரத்தைக் காட்டியவாறு கூறினார். அதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரி அவரை உள்ளே செல்ல அனுமதித்தார். உள்ளே சென்று பரீட்சை மண்டபத்தில் அமர்ந்த அவர் யார் எவர் என்று மேற்பார்வையாளர்கள் அறிந்திருக்கவில்லை. தந்தை தமிழ் மொழிப் பரீட்சைக்குத் தோற்றிய அதே பரீட்சை மண்டபத்தில் தனது மகனும் பரீட்சைக்குத் தோற்றினார்.



இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியவர் வேறு யாருமின்றி மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கபில பெரேரா ஆவார்.

நான் சாதாரண தர தமிழ் பரீட்சைக்குத் தோற்றியது எனது தொழிலில் பதவி உயர்வு பெறும் நோக்கத்திலோ சம்பள உயர்வு பெறும் நோக்கத்திலோ இல்லை. நான் நம்பும் ஒரு விடயம் தான் இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டுமாயின் ஒருவருக்கொருவர் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்வது அவசியமாகும். அவ்வாறு கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு அந்த இனத்தவர்களுடைய மொழியைக் கற்றிருப்பது அவசியமாகும். அதனூடாக அவர்களது இலக்கியம், கலாச்சாரம் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். நான் பரீட்சைக்கு தோற்றுவது இந்த நோக்கத்திலாகும். தமிழ்மொழியைக் கற்கும் முதல் கட்டமாகவாகும்.

தான் சா.த. தமிழ் மொழிக்கு தோற்றிய நோக்கத்தை மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கபில பெரேரா இவ்வாறு கூறினார்.

பேராசிரியர் கபில பெரேரா தனது ஆரம்ப கல்வியைக் கற்பது வேவிட்டை மைத்திரீ வித்தியாலயத்திலாகும். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிடுகின்றார். ஆறாம் தரத்தில் பாணந்துறை ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்திற்குப் பிரவேசிக்கும் இவர் உயர் தரத்தில் சித்தியடைவது 1980ம் ஆண்டில் பாடசாலையின் கணிதப் பிரிவில் மிகச்சிறந்த பெறுபேறைப் பெற்றவராக ஆவார். சா.த. பரீட்சையின் பின் அவரை கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு அனுமதிப்பதற்கு முயற்சித்தார் அவரது தாயார். அந்தக் காலத்தில் சா. தரம் என்று ஒன்று இருக்கவில்லை. அந்த பரீட்சையை அழைத்தது NCGE எனவாகும். அந்தப் பரீட்சையில் தமிழ் மொழி இருக்கவில்லை.

நான் சா.தரத்தில் சித்தியடைந்ததும் எனது தாயார் என்னை கொழும்பு ஆனந்தா கல்லூரியில் சேர்ப்பதற்கு அழைத்துச் சென்றார். அங்கு அதிபர் எனது சா.த. பெறுபேறுகளின் அடிப்படையில் என்னை வணிகப் பிரிவிலேயே இணைத்துக்கொள்ள முடியும் என்றார். நான் வணிகப் பிரிவில் கல்வியை மேற்கொள்ள விரும்பவில்லை. எனது தாய் என்னை கொழும்பு ரோயல் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை இணைத்துக் கொண்டனர். ஆனாலும் நான் ரோயல் கல்லூக்குச் சென்றது ஒரு நாள் மாத்திரமே. நான் அந்த நாள் வீடு திரும்பும் போது பிற்பகல் 4.30 ஆகியது. நான் தாயிடம் ரோயலுக்கு செல்ல முடியாதென்று கூறினேன். மறுநாள் திரும்பவும் நான் சுமங்கலவிற்கே சென்றேன்.

"1981ம் ஆண்டில் நான் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றேன். அது மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்காகும். அதேநேரத்தில் நான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். அதிலும் எனக்கு அனுமதி கிடைத்தது. பல்கலைக்கழகம் செல்வதா இல்லை பாதுகாப்பு கல்லூரிக்கு செல்வதா என்று தெரிவு செய்ய நேர்ந்தது. என்னுடைய அதிர்ஷ்டத்திற்கு கொத்தலாவலையில் பயிற்சி பெற்றுக்கொண்டே மொறட்டுவையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்தது. அதனால் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டேன். நான் 85ம் ஆண்டில் கொத்தலாவலையில் அதிகாரியானேன். 86ம் ஆண்டில் முதலாம் வகுப்பு பட்டமொன்றுடன் அவ்வாண்டின் இரண்டாவது மாணவனாக மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் எனது பட்டப்படிப்பை முடித்தேன். அவ்வாறு இருக்கும்போது நான் நேராக கடற்படையில் இணைந்தேன். அபீத, டோரா, விக்கிரம போன்ற கப்பல்களில் சேவையாற்றினேன். கடற்படையின் பொறியியல் பிரிவில் சேவையாற்றினேன். அந்தக் காலத்தில் அமேரிக்காவில் எனது மேற்படிப்பை முடிப்பதற்கு எனக்கு முழு புலமைப் பரிசில் கிடைத்தது. நான் PHD வரை கல்வி கற்று 93ம் ஆண்டில் மீண்டும் இலங்கைக்கு வந்து கடற்படையிலேயே இணைந்தேன். 95ம் ஆண்டில் லெப்டினன்ட் கமாண்டராக இருக்கும் போது கடற்படையிலிருந்து விலகி மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பிரிவில் விரிவுரையாளராக இணைந்தேன். அது தொடக்கம் நான் சேவையாற்றியது மொறட்டுவை பல்கலைக்கழகத்திலாகும். நான் கடற்படையில் சேவையாற்றியது யுத்தம் நடைபெறும் காலத்திலாகும். அந்தக்காலத்தில் தமிழ் மொழியைக் கற்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு இருந்தது. ஆனால் எனக்கு இருந்த வேலையுடன் அதற்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை." என பேராசிரியர் கபில பெரேரா கூறினார். அவர் முதன்முதலாக தமிழ் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முயற்சி செய்தது 2014ம் ஆண்டிலாகும்.



நான் எனது மகளை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லும்போது பிலியந்தல பன்சலையில் SB அழுத்கெதர என்ற ஆசிரியர் நடத்தும் தமிழ் வகுப்புக்கான விளம்பரம் ஒன்றைக் கண்டேன். அதற்கும் சில நாட்கள் சென்றேன். சரியாக மார்ச் 14ம் திகதி மின்வலு அமைச்சின் செயலாளர் என்னை தொடர்பு கொண்டு மின்சார சபையின் உப தலைவராக பொறுப்பேற்குமாறு கூறினார். அப்பதவியை பொறுப்பேற்று மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகவும் கடமையாற்றுவதுடன் சிரமமாக இருந்ததால் அந்த ஆண்டின் பரீட்சைக்கு தோற்றும் சிந்தனையை விட்டுவிட்டேன். ஆனாலும் எனது இலக்கை கைவிடவில்லை. இந்த ஆண்டில் ஜுலை மாதம் தமிழ் பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பித்தேன். அவ்வாறு செய்துவிட்டு தனியாக தமிழ்மொழியைக் கற்கும் முயற்சியில் இறங்கினேன்.



ஆனாலும் நான் சிந்தித்தேன். இப்பரீட்சையில் சித்தியடையவில்லை என்றால் அவமானமாக இருக்கும். ஏனென்றால் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சா.த. தமிழ் மொழியில் சித்தியடையவில்லை என்று செய்து வரும் என்பதனாலாகும். அதனால் பரீட்சைக்கு சம்பந்தமான அனைத்து பாடப் புத்தகங்களையும் சேகரித்தேன். அரசினால் வழங்கப்படும் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ், முதலாம் இரண்டாம் மூன்றாம் தரங்களின் பாடப் புத்தகங்களையும், எனது மகள் மகன்களுடைய பாடப்புத்தகங்களையும் app ஒன்றையும் அகராதியையும் கையில் வைத்துக் கொண்டு பரீட்சைக்கு தயாரானேன். ஈஸ்டர் ஞாயிறு தினம் வரையில் பிலியந்தலையில் தமிழ் வகுப்பொன்றிற்குச் சென்றேன். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போதும் நான் அவ்வகுப்பில் தான் இருந்தேன். அவ்வகுப்பு இரவில் தான் நடைபெற்றது. தாக்குதலின் பின் வகுப்பை இரவில் நடத்தாமல் பகலில் நடத்தினார்கள். அதனால் அந்த வகுப்பிற்கும் என்னால் செல்ல முடியவில்லை.

இவ்வாறு தனியாக தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டிருந்த பேராசிரியர் கபில பெரேராவின் இளைய மகனாரும் அதே பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவரது அனுபவத்தை பின்வருமாறு விளக்கினார்.

நான் ஒவ்வொரு நாளும் காலையில் உடற்பயிற்சிக்காக நடந்து செல்லும் போது எனது கையடக்க தொலைபேசியில் ஒற்றைச் சொற்கள், எதிர்சொற்கள் என்பவற்றை படம் பிடித்து அதனை படித்துக்கொண்டு தான் நடப்பேன். பரீட்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் இரண்டாவது பகுதிக்கு படிக்க ஆரம்பித்தேன். நான் சரியாக பரீட்சைக்கு படித்தது பரீட்சைக்கு முன் வந்த போயா தினத்திலாகும். அன்று அனைத்து வேலையையும் நிறுத்திவிட்டு பரீட்சைக்காக படித்தேன். அன்று இரவு ஒரு சம்பவம் நடைபெற்றது. எனது அனுமதிப் பத்திரத்தை கையொப்பமிட்டு இருக்கவில்லை. நான் செவ்வாய்க்கிழமை பின்னேரம் கம்பஸ் ரெஜிஸ்ட்ராரிடம் கூறி ஒப்பமிட்டுக் கொள்வதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்நாள் காலையிலிருந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டிருந்தேன். நான் அந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதனால் அன்று அதனை செய்துகொள்ள முடியவில்லை. நான் திரும்பவும் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது இரவு 8 மணி ஆகியது. வீட்டிற்கு செல்லும் போது இரவு 9 மணி. மறுநாள் போயா என்பதால் விடுமுறை. கிராம சேவகரிடம் செய்துகொள்வதாக நினைத்துக்கொண்டு மகளிடம் அம்மாவிடம் கூறி அதனை ஒப்பமிட்டுக் கொள்ளுமாறு கூறினேன். எனது மனைவி இரத்தினபுரி அடிப்படை மருத்துவமனையில் சிறுவர் நோய் சம்பந்தமான விசேட வைத்தியராக கடமை புரிகின்றார்.

நான் அவ்வாறு கூறியதும் என்னுடைய மனைவி நான் விளையாட்டாக சொல்கின்றேன் என்று நினைத்தார்கள். நான் விண்ணப்பித்திருப்பதாக அவருக்கு தெரிந்திருந்தாலும் நான் உண்மையிலேயே பரீட்சைக்கு தோற்றுவேன் என்று அவர் நினைத்திருக்கவில்லை. அதனால் விளையாட்டாக பல விடயங்களை கூறினார்கள். நான் கூறினேன் இன்று என்னை தொந்தரவு செய்யாதீர்கள் நான் பரீட்சைக்காக தயாராகின்றேன் என்று. எனது மகனும் இதே பரீட்சைக்கு தயாராகின்றார். அவரும் படித்துக்கொண்டு இருந்தார். அவரிடம் சென்று "மகனே, நீங்களாவது பரவாயில்லை. அங்கே இருக்கும் சிறுவர், அவர் மிகவும் தீவிரமாக படிக்கின்றார்" என்று கூறி வேடிக்கையாக சிரித்தார்.

செவ்வாய்க்கிழமை பின்னேரம் தான் பரீட்சைக்காக விடுமுறை கோரி விண்ணப்பித்தேன். சாரதியிடம் வியாழக்கிழமை வரமாட்டேன், ஒரு சிரிய வேலையாக செல்கின்றேன் என்று கூறினேன். ஆனால் எனது செயலாளரிடம் பரீட்சைக்கு தோற்றுவதாக கூறினேன். எனது காரியாலயத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருப்பேன். நான் சா.த. பரீட்சைக்கு தோற்றுகின்றேன் என்று அவர் விளையாட்டாக சிரிப்பார்.

பரீட்சை அன்று தனது மகனுடன் பரீட்சைக்கு சென்ற பேராசிரியர் கபில பெரேராவுக்கு இன்னும் பல அதிசயமான நிகழ்வுகள் காத்திருந்தன.

"பரீட்சை மண்டபத்தில் எனக்குப் பின்னால் தான் என்னுடைய மகன் அமர்ந்திருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் பரீட்சைக்கு தோற்றினோம். அது ஒரு விநோதமான அனுபவமாக இருந்தது. தந்தையும் மகனும் சா.தரத்தில் ஒரே பரீட்சைக்கு தோற்றும் முதல் முறையா என்று எனக்குத் தெரியாது. இன்னும் வயதானவர்கள் பரீட்சை மண்டபத்தில் இருந்தார்கள். ஊக்கமாக இருந்தவர்கள் யார் என்று பார்ப்பதற்கு கூட நேரமிருக்கவில்லை. பரீட்சை மண்டபத்தை தேடுவதற்கு அதிக நேரம் செலவானதால் சரியான நேரத்தில் தான் பரீட்சை மண்டபத்தை சென்றடைந்தேன். ஆகக் குறைந்தது என்னுடைய தண்ணீர் போத்தலினால் குடிப்பதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. பல மாணவர்கள் முதலில் பென்சிலால் விடை எழுதினாலும் நான் பேனையினாலேயே எழுதினேன்."

நான் சிறப்பாக பரீட்சைக்கு முகம் கொடுத்தேன் என்று நினைக்கின்றேன். மகனின் 40இல் 38 சரியாக இருந்தது. எனக்கு 40இல் 32 சரியாக இருந்தது. சித்தியடைவேன் என்று எனக்குத் தெரியும். கட்டுரையை அவ்வளவு நன்றாக எழுதவில்லை. அங்கு நடந்தது இதுதான். எனக்கு ஒரு சிறிய தவறு நடந்தது. முதல் பாகத்தில் இரண்டு கேள்விகளுக்கு கட்டாயம் விடை எழுத வேண்டும் என்பதை நான் பார்க்கவில்லை. பந்தியை வாசித்து விடை எழுதுவதை நான் மிகவும் நன்றாக செய்தேன். அதனால் சித்தியடைவேன் என்று நம்புகின்றேன். வேறு நாட்களில் கடைசி ஐந்து கேள்விகள் ஒரு வரைபடத்தை தந்து அதைப்பற்றியதாக இருக்கும். பரீட்சைக்கு முன்பு மகனுடன் இணைந்து முன்னைய ஆண்டுகளின் கேள்விகளுக்கு நன்றாக விடை எழுதுவதற்கு பழகினேன். ஆனால் இம்முறை அந்தக் கேள்வி வரவில்லை. கடைசி மூன்று கேள்விகளும் நான்கு வாக்கியங்களை தந்து அவைகளை சரிப்படுத்தி எழுதுவதாக இருந்தது.



உபவேந்தராக சா.தரத்திற்கு தோற்றுகிறேன் என்று எனக்குத் தோன்றவில்லை. சாதாரண மாணவன் ஒருவன் பரீட்சைக்கு தோற்றுவது போலவே எனக்குத் தோன்றியது. நான் உ. தரப் பரீட்சையில் கணித பாடத்திற்கு தோற்றியது நினைவுக்கு வந்தது. இந்த பரீட்சையில் சித்தியடைவதை விட முக்கியமானது நான் பெற்ற அறிவாகும். எனக்கு முழு வினாத்தாளையும் படித்து விளங்கிக் கொள்ள முடியுமாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் எப்போதும் எனது கல்வியை விருப்பத்துடனும் உற்சாகத்துடனுமே மேற்கொண்டேன். இன்னும் அவ்வாறே தான்.



வடக்கில் சென்று சேவையாற்றுவதற்கு எனக்கு மிகவும் விருப்பமாக உள்ளது. பேராசிரியர் கந்தசாமி ஐயா அவர்கள் யாழ்ப்பாணத்தில் உபவேந்தராக கடமையாற்றுகின்றார். நான் இன்னும் ஒரு வருடமே உப வேந்தராக இருப்பதாக அவரிடம் கூறினேன். இன்னும் சில காலம் உபவேந்தராக இருக்க முடியுமே என அவர் கூறினார். ஆனால் பொறுப்பேற்ற காலத்திற்கு மேலதிகமாக ஒரு நாள் கூட பதவியில் இருக்க மாட்டேன் எனக் கூறினேன். நான் கடமை புரிந்த அனைத்து இடங்களிலும் அப்படித்தான். நான் பேராசிரியர் கந்தசாமி ஐயா அவர்களிடம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வருவதாகக் கூறினேன். எனக்கு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் பேசாத ஒரு இடத்தில் தங்கியிருந்து தமிழ் கற்க வேண்டும் எனக் கூறினேன். எனக்கு அப்படியும் ஒரு இலக்கு இருக்கின்றது. அதனால் தான் நான் சா. தரத்திற்கு தோற்றினேன். பரீட்சை முடிந்ததற்காக நான் தமிழ் கற்பதை நிறுத்த மாட்டேன். என்னிடம் பேச்சுத் தமிழ் புத்தகங்கள் உள்ளன. அவற்றை வைத்து நான் எப்படியாவது தமிழ் பேசுவதற்கு கற்றுக் கொள்வேன்.

98ம் ஆண்டில் நான் சசகாவாவில் ஜப்பான் மொழியைக் கற்றுக் கொண்டேன். என்னால் ஜப்பான் மொழியில் பேச முடியும். அதேபோல் தமிழ் பேச வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் இருக்கின்றேன். சுனாமி காலத்தில் நான் நாராவின் தலைவராக இருந்தேன். அந்தக் காலத்தில் மீன் வள அமைச்சராக இருந்தவர் சந்திரசேன விஜேசிங்க. சுனாமியின் பின் ஒருநாள் ஜப்பான் தூதுவர் காலி துறைமுகத்தில் படகுகளை விநியோகிக்கும் விழாவில் கலந்துகொண்டார். அவரது உரையை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்தது நானே. அதனால் கற்றுக்கொண்ட எதுவும் வீன் போகாது என்று உணர்ந்தேன்.

நான் பரீட்சைக்கு தோற்றியது பத்திரிகையில் வருவதை நான் விரும்பவில்லை. என்னுடைய மாணவன் ரன்ஜித் அமரசிங்க மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமை புரிகின்றார். அவர் என்னை தனிப்பட்ட விடயமாக சந்திப்பதற்கு வந்திருந்தார். நேற்று முழுவதும் நான் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன், ஆனால் முடியவில்லை. சேர் பரீட்சைக்கு தோற்றியதாக கூறுவது உண்மை தானா எனக் கேட்டார். நான் ஆம் என்றேன். அவர் தான் இதனை பத்திரிகையில் போட வேண்டுமென கூறினார். பேராசிரியர் ஜயந்த விஜேசேகரவும் என்னைப் பார்க்க எனது அலுவலகத்திற்கு வந்தார். கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்று அவர்கள் கூறியதனாலேயே நான் உங்களுடன் உரையாட சம்மதித்தேன்.



நான் வாழ்க்கையில் பெற்ற அனைத்து வெற்றிக்கு பின்னாலும் இருந்தது நான் கற்ற கல்வியாகும். எனது தந்தை நான் சிறுவயதில் இருக்கும் போதே இறந்துவிட்டார். ஆனால் எனது கல்வியை மிகவும் ஆர்வமாக மேற்கொள்கின்றேன். நாம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கல்வி கற்கக்கூடாது. இன்னொருவருக்கு தொந்தரவு செய்யாமல் வாழ்வதற்கு கல்வி அத்தியவசியமாகும். அதனால் இன்று இருக்கும் பரீட்சையில் சித்தியடையும் கல்வித்திட்டம் சிறந்ததல்ல. தான் கற்பதை விருப்பத்துடன் கற்க வேண்டுமென்று அவர் கூறுகின்றார்.



(மூலப்பிரதி : Lakmal Bogahawaththa ♥️

தமிழ்ப்பெயர்ப்பு 🙏🏽 : Arshak Akram)

👉🏼 இப்பதிவு கடந்தவருடம் டிசம்பரில் எழுதப்பட்டது.



இங்கே குறிப்பிடப்படும் #பேராசிரியர்_கபில_பெரேரா அவர்கள் தான் நேற்று 13.08.2020 முதல் கல்வி அமைச்சின் செயலாளர்!

Post a Comment

Previous Post Next Post