மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 34/18, 34/5, 34/6, 34/35, 40/10, 40/16 தீர்மானங்களைப் பின்தொடர்கின்ற கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான உரிமையை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான விஷேட அறிக்கையாளர், மனித உரிமை பாதுகாவலர்களின் நிலைமை குறித்த விஷேட அறிக்கையாளர், சிறுபான்மைப் பிரச்சினைகள் குறித்த விஷேட அறிக்கையாளர், இனவெறி, இனப்பாகுபாடு, இன வெறுப்பு போன்ற சமகால வடிவங்களுடன் தொடர்புடைய சகிப்புத்தன்மையின்மை பற்றிய விஷேட அறிக்கையாளர், மதம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் பற்றிய விஷேட அறிக்கையாளர், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான விஷேட அறிக்கையாளர்கள் என்ற வகையில் தங்களுடன் உரையாடக் கிடைத்ததை பெருமையாகக் கருதுகின்றோம்.
இந்த வகையில் ஹிஜாஸ் ஒமர் ஹிஸ்புல்லாஹ் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் கைது செய்யப்பட்டமை குறித்து தங்களது அரசாங்கத் தகவல்கள் மூலம் எங்களுக்குக் கிடைத்த விடயங்களை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றோம். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஒரு முக்கியமான வழக்கறிஞர், மனித உரிமைப் பாதுகாவலர், இலங்கையின் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் அங்கத்தவர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு உயர்மட்ட வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். இதில் பரந்தளவில் பிரபல்யமான 2018 இல் இலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பான வழக்கும் உள்ளடங்கும்.
இலங்கையில் முஸ்லிம் சிறுபான்மைக்கெதிரான வன்முறை மற்றும் பாரபட்சம் தொடர்பான வழக்குகளில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் ஆஜராகியிருக்கிறார். சிங்கள பௌத்த தேசியவாத அமைப்பான பொதுபல சேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பான பல வழக்குகளில் குறிப்பிடத்தக்க அளவில் அவர் பங்கேற்றிருக்கிறார். கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை கட்டாயமாக எரிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்பிலும் இது முஸ்லிம் சிறுபான்மையினரிடத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பிலும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் மற்றும் சிரேஷ்ட வைத்தியர்களுடன் இணைந்து அறிக்கை தயாரிப்பதில் அவர் மார்ச் பிற்பகுதியில் இருந்து ஈடுபட்டு வந்தார்.
எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, ஏப்ரல் 14 இல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஹோகந்தரவில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2019 ஈஸ்டர் தினத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இவரும் ஒருவர். கைது செய்யப்படுவதற்கு முன்னர் தன்னை சுகாதார அதிகாரியாக இனம் காட்டிக் கொண்ட ஒருவரிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகம் உள்ளதால் தான் வரும்வரை குடும்பத்துடன் வீட்டிலேயே இருக்குமாறு அவர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை வேண்டியுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் ஐந்து பேர் அவரின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் தங்களை சிஐடி அதிகாரிகள் என்று அடையாளம் காட்டி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கைவிலங்கிட்டு வீட்டையும் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். வழக்கறிஞர் – வாடிக்கையாளருக்கான சிறப்புரிமையையும் மீறி அவரது பைல்களை பறிமுதல் செய்துள்ளனர். அவரது வீட்டைச் சோதனையிட்டபின் மேலும் சில கேள்விகளுக்குப் பிறகு அவர் சிஐடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் கைது செய்யப்பட்டமைக்கான குற்றச் சாட்டுக்களோ சட்டபூர்வமான காரணங்களோ அறிவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 15 மாலையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் பேச்சாளர் கருத்து வெளியிடும் போது, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் “ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புபட்டிருந்ததன் காரணமாகக்“ கைது செய்யப்பட்டார் எனவும், குண்டுதாரிகளுடன் அவர் “பல்வேறு தொடர்புகளைக்“ கொண்டிருந்தார் எனவும் குறிப்பிட்டார். சட்டமாஅதிபரிடமிருந்து ஆலோசனையோ அனுமதியோ பெறாமல் சிஐடி செயற்பட்டதையும் பொலிஸ் பேச்சாளர் ஏற்றுக் கொண்டார். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான தடுப்புக் காவல் பயங்கரவாதத் தடைச் சட்டம், குறிப்பாக அதன் 9(1) பிரிவு, அரசியல் யாப்பின் 4 (ஆ) பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததாகக் கூறப்படுகிறது. தடுத்து வைப்பதற்கான உத்தரவு ஏப்ரல் 17 தேதியிடப்பட்டபோதும், ஏப்ரல் 25 அன்றே அதாவது கைது செய்யப்பட்டு 11 நாட்களுக்குப் பிறகே ஹிஜாஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்புக்காவல் உத்தரவு கூட தெளிவற்றதாகக் காணப்படுகிறது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் “நடத்திய (….)வருக்கு உதவினார், உற்சாகமளித்தார்“ எனவும், “சமூகங்களிடையே மதநல்லிணக்கத்துக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களில்“ ஈடுபட்டதாகவும், “இந்தத் தகவல்களை இலங்கைப் பொலிசாரிடமிருந்து வேண்டுமென்றே மறைத்ததாகவும்“ இந்தத் தடுப்புக் காவல் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குச் சார்பான எந்த உறுதியான ஆதாரத்தையும் இந்தத் தடுப்பு உத்தரவு கொண்டிருக்கவில்லை.
எந்தத் தாமதமும் குறுக்கீடுகளும் தணிக்கைகளும் இன்றி முழுமையான இரகசியம் பேணி அவரது சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கும் கலந்தாலோசிப்பதற்கும் தொடர்பு கொள்ளவும் போதுமான அவகாசங்களும் நேரங்களும் வசதிகளும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டதில் இருந்து அவருக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு குறுகிய நேரங்களில் மட்டுமே அவருக்கு சட்டத்தரணிகளை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 இல் ஐந்து நிமிடங்களும் ஏப்ரல் 16 இல் 15 நிமிடங்களும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சந்திப்புக்கள் பொலிசாரின் முன்னிலையிலேயே நடத்தப்பட்டன. வழக்கறிஞர் – வாடிக்கையாளர் சிறப்புரிமைகளை மீறி, பொலிசாருக்கு விளங்கும் வகையில் உரையாடல்களை சிங்கள மொழியிலேயே வைத்துக் கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர். தனது சட்டத்தரணியுடனான இரண்டாவது சந்திப்பின் போது, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு குறிப்பான சில தகவல்களை வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பொறுப்பான அதிகாரி உரையாடலின் போது குறுக்கிட்டு இது “புலனாய்வு விசாரணையின் ஒரு பகுதியுடன் தொடர்புபட்டிருக்கிறது“ எனக் கூறி சில தகவல்களை சட்டத்தரணிக்கு வழங்க முடியாது என ஹிஜாஸை எச்சரித்துள்ளார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சிஐடியால் இயக்கப்படும் ஒரு கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தினசரி விசாரணைகளுக்காக மட்டுமே அவர் கூண்டிலிருந்து வெளியே அழைத்து வரப்படுவதாகவும் கூறப்படுகிறது. அவரது குடும்பத்துடனான அவரது தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஆறு வாரங்களில் இரண்டு தடவைகள் மட்டுமே அவரது மனைவிக்கு அவரைப் பார்க்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிலவேளைகளில் மட்டும் குறுகிய நேரத்தில் குடும்ப அழைப்புக்களை மேற்கொள்ள மட்டுமே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை கூட சிஐடியினரால் கண்காணிக்கப்படுகின்றன. அவரைப் பார்ப்பதற்காக ஏனைய குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியபோதும் அவை மறுக்கப்பட்டுள்ளன. அடுத்தவர்களுடனான அவரது தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் மே 01 ஆம் திகதி அவர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட போது தனது மனைவியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் தனது பாதுகாப்பு தொடர்பில் ஏக்கத்தையும் கவலையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஒருவருக்கும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக சிஐடியின் மே 02 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினரின் நீண்ட காலமாக இழுபட்டு வரும் சொத்து வழக்கின் ஆலோசகராக ஹிஜாஸ் இருந்ததாகச் சொல்லப்பட்ட போதும் இவர் ஹிஜாஸுடைய வாடிக்கையாளரை தொடர்புபடுத்தும் புள்ளியாக மட்டுமே இவர் இருந்துள்ளார். மேலும் ஈஸ்டர் தாக்குதலுக்கு முந்திய காலங்களில் ஹிஜாஸ் இந்த நபருடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. பின்னர் சிஐடியினர் தனது விசாரணையின் மையத்தை ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டார் என்பதிலிருந்து திருப்பி, சேவ் த பேர்ள்ஸ் தொண்டு நிறுவனத்துடனான ஈடுபாட்டை நோக்கி நகர்த்தியதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பின் மூலம் அவர் குழந்தைகளின் மனதை மாற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தொண்டு நிறுவனத்தினால் ஆதரவு வழங்கப்படுகின்ற நான்கு சிறுவர்கள், ஹிஜாஸின் கைதின் பின்னர் தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் போலியான தகவல்களை வழங்குமாறு தாம் மிரட்டப்பட்டதாகத் தெரிவித்தனர். இந்த நான்கு சிறுவர்களும் பெற்றோரின் துணையின்றி அடையாளம் தெரியாத இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு ஓரிரவு தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கு அவர்கள் பல பொலிஸ் அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பின்னர் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மே 19 இல் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மே 21 இல் ஹிஜாஸின் மூன்று சட்ட ஆலோசகர்கள் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அவரது உரிமையை மீறுவதாகக் கூறி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு ஜூன் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வேளையில் இந்த வழக்கில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்கான முதன்மை வழக்கை நீதிமன்றம் தீர்மானிக்கும். இதன் விளைவாக வழக்கைத் தொடர அனுமதி வழங்கவோ மறுக்கவோ செய்யும். இந்த நடைமுறை எவ்வளவு காலம் எடுக்கும் என்தையோ இடைக்கால அல்லது இறுதி நிவாரணம் உயர்நீதிமன்றத்தினால் எப்பொழுது வழங்கப்படும் என்பதையோ எம்மால் அறிந்து கொள்ள முடியாமலுள்ளது.
இன்றுவரை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்னும் முறையாக விசாரிக்கப்படவில்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை 18 மாதங்கள் வரை குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்க முடியும். அதன்பிறகு சட்டமாஅதிபர் பிணை வழங்காவிட்டால் விசாரணை முடியும் வரை காலவரையறையின்றி அவரை தடுத்து வைக்க முடியும். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டதில் இருந்து பல ஊடக அலைவரிசைகள் தவறானதும் உறுதிப்படுத்தப்படாததுமான பல செய்திகளை பரப்பியுள்ளன. அவை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளன. சில அலைவரிசைகள் சேவ் த பேர்ள்ஸ் தொண்டு நிறுவனத்தினால் பராமரிக்கப்பட்ட சிறுவர்களின் சாட்சியங்களைப் பரப்பியுள்ளன.
இந்தக் குற்றச் சாட்டுக்கள் சரியானது என நாங்கள் முன்கூட்டியே தீர்மானிக்க விரும்பாவிட்டாலும், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான அரசாங்கத்தின் கடமையை நாங்கள் புரிந்து கொண்டாலும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை தன்னிச்சையாகக் கைது செய்வது மற்றும் நீண்டகாலமாகத் தடுத்து வைத்திருப்பது குறித்து எங்களது ஆழ்ந்த கவலையை வெளியிடுகின்றோம். இது இலங்கையின் அரசியலமைப்புடனோ சர்வதேச சட்டங்களின் கீழான சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளுடனோ இணங்குவதாக இல்லை. அதற்கும் மேலாக இலங்கையில் அதிகரித்து வரும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள், வன்முறை மற்றும் பாரபட்சம் தொடர்பான அடிப்படை உரிமை வழக்குகளில் அவர் காட்டிவரும் ஈடுபாட்டிலிருந்து அவரைத் தடுக்கும் வகையில் அவரது கைதும் தடுத்து வைத்தலும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களும் அவரது சட்டப் பணிகளுக்கும் மனித உரிமையைக் காக்கும் பணிகளுக்குமான பழிவாங்கலாக இருக்குமோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.
மனித உரிமைப் பாதுகாவலரும் வழக்கறிஞருமான ஒருவரின் நியாயமான பணிகளையும் கருத்துக்களை வைத்திருப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் மற்றும் அவரது பணியை சுயாதீனமாகவும் மிரட்டல், துன்புறுத்தல் அல்லது பழிவாங்கல்கள் பற்றிய அச்சமின்றியும் மேற்கொள்வதற்கான உரிமையையும் குற்றமாக்குவதும் இடையூறு விளைவிப்பதாகவே அமைகிறது. மேலும். சட்டவிரோதமான எந்தச் செயற்பாடுகளிலும் அவருக்கு எந்தவிதமான தொடர்புகளிலும் ஈடுபட்டதை நிரூபிப்பதற்கான எந்தவிதச் சான்றுகளும் போதுமானதாக இல்லாத நிலையிலும் மத நல்லிணக்கத்தைக் குலைத்தாகவும் பயங்கரவாதத் தாக்குதல்தாரிக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஆதாரமற்ற மற்றும் தெளிவற்ற பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையடைகின்றோம். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அங்கத்தவர் என்ற இன, மத அடையாளம் காரணமாக அவர் இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்பதையிட்டு நாம் குழப்பமடைந்துள்ளோம்.
சிஐடி மற்றும் பிற தொடர்புடைய அரச நிறுவனங்களின் நடத்தை குறித்து நாங்கள் தீவிர கவலையை வெளிப்படுத்துகின்றோம். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டார், அவரது சொந்த உடைமைகள் சில பறிமுதல் செய்யப்பட்டன. இருந்தாலும் அந்த நேரத்தில் அவர் கைது செய்யப்படுவதற்கான பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. இது அவரது தனியுரிமையையும் உரிய செயல்முறை நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அவரது உரிமைகளையும் மீறுவதாக அமைகிறது. அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்குப் பிறகே அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவு குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்டது. இது 72 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தின் முன் ஆஜராக்கப்பட வேண்டும் என்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் இணங்கியதாக இல்லை. மேலும் தடுப்புக் காவல் உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருக்கிறார். எந்தவொரு தடுப்புக்காவல் உத்தரவும் பாதுகாப்பு அமைச்சரால் கையெழுத்திடப்பட வேண்டும் என பயங்கரவாத தடைச் சட்டம் தெளிவுபடுத்துகிறது. ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுப் பொறுப்புக்களையும் வைத்திருக்க முடியாது என அரசியலமைப்பு கூறுவதால் பாதுகாப்பு அமைச்சர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளது.
சட்ட விவகாரங்களில் தொடர்புகள் இன்றி, பயங்கரவாத குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவரின் குடும்ப உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தியமைக்காக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். இத்தகைய நடைமுறை சர்வதேச சட்டத்தி்ன் கீழான தங்களது அரசாங்கத்தின் கடப்பாடுகளுக்கு முரணாக அமையும். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தரணிகளின் வகிபாகம் தொடர்பான அடிப்படைக் கொள்கைகளின் 16 ஆம் 18 ஆம் விதிகளுக்கு இது முரணானது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களை மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களது பணியின் செயல்திறனைக் கட்டுப்படுத்துவதற்கான பெரிய அளவிலான போக்கின் ஒருபகுதியாக இந்தக் கைது இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பயன்பாடு எவ்வாறு பல தன்னிச்சையான தடுப்புக் காவல்களுக்கும் கைதிகளின் சித்திரவதைக்கும் வழிவகுத்தது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரிவுகள் பலதடவைகள் கவலை வெளியிட்டுள்ளன. அதனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களைப் பூர்த்தி செய்யும் சட்டத்தை ஈடு செய்யுமாறு மேன்மைதங்கிய தங்களது அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம். காணாமல் போதல்கள், காணி உரிமைகள், வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் போன்ற விஷேட விடயங்களில் பணியாற்றும் தனிநபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பாரபட்சமான முறையில் அடிக்கடி பயன்படுத்தப்படுவதாக ஐநாவின் விஷேட அறிக்கையாளர்கள் மேலும் தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளனர். சட்டத்தின் 2 ஆவது பிரிவிலுள்ள பயங்கரவாதத்தின் வரையறையை அவர்கள் “அதிகளவு விரிந்ததாகவும் தெளிவற்றதாகவும்“ விபரித்திருக்கிறார்கள்.
மேலும் விசாரணைகளுக்காகவும் தடுத்து வைப்பதற்காகவும் தடுப்புக்காவலில் வைப்பதிலும், தடுத்து வைப்பதன்போது மோசமாக நடத்தப்படுவதில் இருந்து பாதுகாப்புப் பெறுவதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9 ஆவது பிரிவு சிக்கலுடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நீதித்துறையின் திருப்திகரமான எந்தவொரு ஈடுபாடும் இல்லாமல் நீண்டகாலம் நிர்வாக ரீதியாகத் தடுத்து வைத்திருப்பது, தடுத்து வைத்தலின் சட்டபூர்வத் தன்மையை சட்டரீதியாக மீளாய்வு செய்வதற்கான உரிமை மற்றும் சுதந்திரம் தன்னிச்சையாகப் பறிக்கப்படுதல் ஆகிய மதிப்பிழக்க முடியாத இரண்டு விடயங்களையும் மீறுவதாகும்.
இறுதியாக இந்த விவகாரம் இலங்கையில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாட்டின் பரந்த வடிவத்தை எடுத்துக் காட்டுவதையிட்டு நாம் வருந்துகின்றோம். ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் சில சந்தர்ப்பங்களில் இலங்கைச் சமூகத்தின் சில பகுதிகளில் நீண்ட பாதிப்பைச் செலுத்திய இன மத சகிப்புத்தன்மையை முக்கியமானதாகவும் வேண்டப்படுவதாகவும் மாற்றியுள்ளன. மதச்சிறுபான்மையினரின் உறுப்பினர் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலரான ஒருவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாரபட்சமானதும் தண்டிப்பதுமான பயன்பாட்டைப் பற்றிய எங்களது ஆழந்த கவலையை மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம். எந்தவொரு நபரும் நாட்டுச் சட்டம் பயங்கரவாதம் என வரையறுத்திருக்கும் செயலொன்றில் தெரிந்து கொண்டோ அல்லது தன்னார்வத்தினாலோ ஈடுபட்டாலோ அல்லது ஒத்தாசை புரிந்தாலோ அன்றி சர்வதேச மனித உரிமை விழுமியங்களுக்கும் நியமங்களுக்கும் இணங்க யாரும் தண்டிக்கப்படக் கூடாது என்பதை நினைவூட்டுகிறோம்.
இங்கு கூறப்பட்டுள்ள தகவல்களையும் அவதானங்களையும் வைத்து இந்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சர்வதேச மனித உரிமைகள் கருவிகள் மற்றும் தரநிலைகளைக் குறிப்பிடுகின்ற இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் கவனம் செலுத்துமாறு வேண்டுகிறோம்.
மனித உரிமைகள் பேரவையால் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைகளின்படி எங்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்படும் அனைத்து விவகாரங்களையும் தெளிவுபடுத்துவது எமது பொறுப்பு என்ற வகையில், பின்வரும் விடயங்களில் உங்களது கவனத்தைக் கோருகிறோம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து உங்களிடம் மேலதிக தகவல்களோ கருத்துக்களோ இருந்தால் வழங்குங்கள்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்து தடுத்து வைத்திருப்பதற்கான உண்மையான மற்றும் சட்டபூர்வமான காரணங்கள் குறித்த விரிவான தகவல்களை வழங்குங்கள்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தனது வழக்கறிஞர்களுடன் குறுக்கீடுகள் அல்லது தணிக்கைகள் இன்றி முழு இரகசியத்தன்மையுடன் தொடர்புகொள்வதையும் ஆலோசனை பெறுவதையும் தடுப்பதற்கான காரணங்களை வழங்குங்கள். தங்களது விருப்பப்படி ஒரு சட்டத்தரணியை நேரடியாக அணுகுவதற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு உள்ள உரிமை தொடர்பான சர்வதேச நியமங்களுடன் இந்த நடவடிக்கை எவ்வாறு பொருந்துகிறது என்பதையும் விளக்குங்கள்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் சரியான தன்மை குறித்து தெளிவுபடுத்துங்கள். அவர் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அல்லது குற்றம் சாட்டப்படுவதாக இருந்தால், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் விஷேட அறிக்கையாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள மாதிரி வரையறைகளையும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸில் தீர்மானம் 1566 (2004) உட்பட்ட சர்வதேச விதிமுறைகளால் விபரிக்கப்பட்ட பயங்கரவாதத்தின் வரையறையையும் ஆழமாகப் புரிந்து கொண்டே அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிடுங்கள்.
இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்கள், குறிப்பாக மதச் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக வாதிடுவோர் மற்றும் செயற்படுவோர், தங்களது நியாயமான பணிகளை எந்தத் தொல்லைகளும் தொந்தரவும், துன்புறுத்தல் நடவடிக்கைகளும் அச்சுறுத்தல் பற்றிய பயமும் இன்றி பாதுகாப்பானதும் சாத்தியமானதுமான சூழலில் மேற்கொள்ள முடிகிறதா என்பதை உறுதிப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்தையும் குறிப்பிடுங்கள்.
இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய இன மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் பாகுபாடு அதிகரித்து வருவதான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்ளை வழங்குங்கள்.
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற, உரிய செயன்முறைகளுக்கான சர்வதேச நியமங்களைப் பூர்த்தி செய்கின்ற சட்டமொன்றைப் பதிலீடு செய்யும் வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யாமல் இன்னும் அதை சட்டப் புத்தகங்களில் வைத்திருப்பது தொடர்பாக மேன்மைதங்கிய உங்களது அரசாங்கம் 2020 ஜனவரியில் அறிவித்தல் வெளியிட்டதற்கான காரணத்தை விளக்குங்கள். இலங்கையால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு ஐநா மனித உரிமைகள் உடன்படிக்கைகளின் கீழ் உங்களது அரசாங்கத்தின் சர்வதேச கடப்பாடுகளுடன் பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு ஒத்துப் போகிறது என்தையும் விளக்குங்கள்.
இவற்றுக்கான பதிலை 60 நாட்களுக்குள் எதிர்பார்க்கிறோம். அதற்குள் பதில் கிடைக்காவிட்டால் இந்தக் கடிதமும் அதன் பின் உங்களது அரசாங்கம் வழங்கும் பதில்களும் கடிதங்களை அறிக்கையிடும் இணையத்தளங்கள் வழியாக பகிரங்கப்படுத்தப்படும். பின்னர் அவை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வழக்கமான அறிக்கையிலும் உள்ளடக்கப்படும்.
மேன்மைதங்கிய உங்களது பதிலுக்காகக் காத்திருக்கும் அதேவேளை, சொல்லப்பட்ட வன்முறைகளைத் தடுக்கவும் அவை மீண்டும் நிகழாமல் தவி்ர்க்கவும் தேவையான அனைத்து இடைக்கால நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டுக்கள் சரியானவை என விசாரணைகள் தெரியப்படுத்தினால் அல்லது பரிந்துரைத்தால் சொல்லப்படும் மீறல்களுக்குப் பொறுப்பான எந்தவொரு நபர் அல்லது நபர்கள் தொடர்பான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துமாறும் வேண்டுகிறோம்.
டேவிட் கேயி – கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான உரிமையை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான விஷேட அறிக்கையாளர்,
மேரி லோலர் – மனித உரிமை பாதுகாவலர்களின் நிலைமை குறித்த விஷேட அறிக்கையாளர்,
பெர்னானட் டி வரென்ஸ் – சிறுபான்மைப் பிரச்சினைகள் குறித்த விஷேட அறிக்கையாளர்,
ஈ.தென்டாய் அச்சியம் – இனவெறி, இனப்பாகுபாடு, இன வெறுப்பு போன்ற சமகால வடிவங்களுடன் தொடர்புடைய சகிப்புத்தன்மையின்மை பற்றிய விஷேட அறிக்கையாளர்,
அஹமட் ஷஹீத் – மதம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் பற்றிய விஷேட அறிக்கையாளர்,
பெனுஆலா நிஎய்லோன் – பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான விஷேட அறிக்கையாளர்கள்
Post a Comment