Headlines
Loading...
ஜனாசாக்கள் எரிப்பு - முஸ்லிம் அரசியல்வாதிகளின் இயலாமையும், அறிக்கை மன்னர்களும்

ஜனாசாக்கள் எரிப்பு - முஸ்லிம் அரசியல்வாதிகளின் இயலாமையும், அறிக்கை மன்னர்களும்


கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா மீண்டும் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்த நாடு கொரோனாவின் பாரிய அச்சத்திலிருந்து விடுபட்டு மக்களின் வாழ்வு இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சூழ்நிலையிலேயே இந்த தகனம் நடைபெற்றுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றபோது இதனை கேட்க பார்க்க யாரும் இல்லாத அனாதைகள் போன்ற பரிதாபகரமான தோற்றம் இந்த நாட்டு முஸ்லிம்கள் மீது காணப்படுகின்றது. ஆனால் ஏராளமான அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது.

ஜனாஸா எரிக்கப்பட்டதன் பின்பு முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் வழக்கம் போன்று ஊடகங்களுக்கு கண்டன அறிக்கையை வழங்கிவிட்டு, அது எந்த ஊடகங்களில் வெளிவந்துள்ளது என்று பரீட்சித்துவிட்டு தங்களது கடமை முடிவடைந்துள்ளது என்ற திருப்தியில் உள்ளனர்.

வேறு சிலர் கடந்த தேர்தலுக்கு முன்பு உரிமை கோசம் முழங்கியதனால் ஏற்பட்ட களைப்பு காரணமாக தற்போது ஒய்வு எடுத்துக்கொண்டு அமைதியாக உள்ளனர்.

இந்த ஜனாஸா எரிப்புக்கு கண்டனம் தெரிவித்தால் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்கின்ற சலுகைகள் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சநிலை அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் காணப்படுகின்றது.

அமைச்சு பதவிகளை பெற்றவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பவர்களாக தனது சமூகத்தை மறந்த நிலையில் உள்ளனர். சமூகத்தைவிட எஜமானர்களே அவர்களுக்கு முக்கியமாகும். 

மறுபுறத்தில் எதிர்தரப்பில் உள்ள சிலர், எதிர்காலங்களில் சலுகைகளை பெறுவதற்காக அரசாங்கத்துடன் புதிய உறவுகளை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த ஜனாஸா விடயத்தை பெரிதுபடுத்தினால், அது தங்களது எதிர்கால சுகபோக அரசியலுக்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் காணப்படுகின்றது.

மொத்தத்தில் கூறப்போனால் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் தங்களது சமூகத்தை நன்றாகவே ஏமாற்றி வருகின்றார்கள் என்பது இவ்வாறான சம்பவங்களின்போது புலனாகின்றது.

இந்த நிலையில் இவ்வாறான சம்பவம் போன்று தமிழர்களுக்கு அவர்களது சமய சடங்குகளுக்கு எதிரான நிலைமை ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் ?

தமிழ் அரசியல்வாதிகள் மக்களை திரட்டி வீதியில் இறங்கி அகிம்சை போராட்டத்தினை மேற்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு துணையாக சிவில் அமைப்புக்களும் வீதியில் இறங்கியிருக்கும். இதனால் சர்வதேசத்துக்கு இதன் வலிமை உணரப்பட்டிருக்கும்.

அத்துடன் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உற்பட மேற்கு நாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்து தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை முறையிட்டு உதவி கோரியிருப்பார்கள். இவர்களுக்கு துணையாக புலம்பெயர் அமைப்புக்கள் தாங்கள் வசிக்கின்ற நாடுகளில் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடாத்தியிருப்பார்கள்.

இவ்வாறு செய்கின்றபோது இலங்கை அரசாங்கத்துக்கு ராஜதந்திர சிக்கலும், சர்வதேசரீதியில் தலைகுனிவும் ஏற்பட்டிருக்கும். இதனால் அரசாங்கம் தனது இறுக்கமான கொள்கையிலிருந்து பின்வாங்கியிருக்கும்.

ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிக்கை விடுவதனை தவிர வேறு எதனையும் செய்யமாட்டார்கள் என்றும், அவ்வாறு எதனையும் செய்யும் திராணி அவர்களிடம் இல்லை என்றும் நன்றாக விளங்கியதனாலேயே சிங்கள இனவாதிகளை மகிழ்விப்பதற்காக இவ்வாறு ஜனாஸாக்களை எரிக்கின்றனர்.

முகம்மத் இக்பால்

0 Comments: