Top News

நெருக்கடிகளை எதிர்கொள்ளவுள்ள ரவூப் ஹக்கீம்


சஹாப்தீன் -

மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுந் தரப்புடன் இணைந்து செயற்பட வேண்டுமென்ற எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நெருக்கடிகளை எதிர் கொள்ள இருக்கின்றார்.

பொது ஜன பெரமுன முன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இதனால், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவை அவசியமற்றதாக இருக்கின்றது. இந்நிலையில் வலிந்து ஆளுந் தரப்பாக மாறிக் கொள்வதற்குரிய சமிக்கைகளை அக்கட்சியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மு.காவின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நசீர் அஹமட. தேசிய பட்டியல் விவகாரம் குறித்து கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம் கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னதாக, தாமாகவே சஜித் பிரேமதாஸவை கண்டித்துள்ளார்.

அதே வேளை, திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மு.காவின் பிரதித் தலைவர்களுள் ஒருவருமான ஹரீஸும் சஜித்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு பொது ஜன பெரமுன பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்ல வேண்டும். என்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் கூட்டமைப்பின் கதையை கேட்டு கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களுக்கு இனியும் அனுமதிக்க முடியாது. தனிநபர்களை திருப்திப்படுத்தும் எவ்வித நடவடிக்கைக்கும் நான் அனுமதி வழங்கப்போவதில்லை என்பதை கிழக்கில் பிறந்த ஒரு மக்கள் பிரதிநிதியாக தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறி வைக்கிறேன் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

இவர்களின் இக்கருத்துக்கள் ஆளுந் தரப்புக்கு செல்ல வேண்டுமென்ற அவர்களின் எண்ணத்தை வெளிக்காட்டுவதாகவே இருக்கின்றன.

ஆளுந் தரப்பை பொறுத்த வரை மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதில் எந்த தடைகளும் இருக்காது. அவர்கள் இணையும் பட்சத்தில் அமைச்சர் பதவிகளும் வழங்கப்படமாட்டாது. ஆனால், ஆளுந் தரப்பினர் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமை இணைத்துக் கொள்ளமாட்டார்கள். ரவூப் ஹக்கீமை தவிர்த்து மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கே ஆளுந் தரப்பினர் இணக்கம் தெரிவிப்பார்கள்.

ஆதலால் கடந்த காலங்களில் கட்சியை காப்பாற்றுவதற்காகவே ஆளுந் தரப்பில் இணைந்து கொண்டோம் என்று ரவூப் ஹக்கீமால் சொல்லும் சூழல் காணப்படவில்லை. அதனால் கட்சியை காப்பாற்ற வேண்டுமென்று கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் மேடை போடும் நிலை ரவூப் ஹக்கீமுக்கு ஏற்படலாமென்று தெரிகின்றது.

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் இன்றைய மனநிலையை பொறுத்த வரை முஸ்லிம் கட்சிகளின் மீது மட்டுமன்றி தேசிய கட்சிகளின் மீது எல்லா அரசியல்வாதிகளின் மீதும் வெறுப்படைந்துள்ளார்கள். ஒவ்வொரு ஆட்சியிலும் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் உரிமைசார் விடயங்கள் யாவும் கவனத்திற் கொள்ளப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

முஸ்லிம் கட்சிகள் ஆளுந் தரப்பினருடன் இணைந்து கொண்டால்தான் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியுமென்ற கருத்தினைக் கொண்டுள்ளார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் கட்சிகள் யாவும் ஆளுந் தரப்பில் அமைச்சர்கள் என்றிருந்தார்கள். ஆனால், சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள சக்தி பெற்றிருக்கவில்லை. முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சமூகத்தை அடமானம் வைத்து கொந்தராத்து அரசியல் செய்து கொண்டிருப்பதுதான் உண்மையாகும்.

சஹாப்தீன் மீராஸாஹிபு
14.8.2020

Post a Comment

Previous Post Next Post