- எம்.என்.எம்.யஸீர் அறபாத் -
இலங்கையில் முஸ்லிம் அரசியலில் பலர் தோன்றி மறைந்திருக்கிறார்கள். ஒரு சிலரே மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறானவர்களில் ஒருவராக மர்ஹும் அஷ்ரப் அவர்களை நாம் பார்க்கிறோம்.
இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டில் (1948) ஒரு சமூகத்தின் விடிவுக்காய் கிழக்கில் உதித்த சூரியனாக சம்மாந்துறை மண்ணில் குஸையின் விதானை, மதினா உம்மா தம்பதியினருக்கு மகனாக அஷ்ரப் ஒக்டோபர் 23 இல் பிறந்தார்.
கல்முனை வெஸ்லி கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியையும் பின்னர் இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வியை தொடர்ந்து, சட்டத்தரணியாக கடமையாற்றினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமுதுமாணி பட்டமும் பெற்றார். ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் பின்னர் நியமிக்கப்பட்டார்.
எழுத்துத்துறையிலும் தனது திறமைகளை வெளிக்காட்டினார். சிறுகதைகள், கவிதைகள், பத்திரிகை மற்றும் சஞ்சிகைக்கு தமிழில் கட்டுரைகளும் எழுதினார். இவர் எழுதிய "நான் எனும் நீ" கவிதை பெரும் தொகுப்பாக வெளியிடப்பட்டது. கவிஞர் திலகம் என அஷ்ரப் போற்றப்பட்டார். அரசியலமைப்புச்சட்டம் தொடர்பாக தமிழில் ஒரு நூலை எழுதினார்.
இவ்வாறு தனது திறமைகளை அரசியலிலும் வெளிக்காட்டத் தவறவில்லை. தமிழ் அரசியல் தலைவர்களாலும் கவரப்பட்டிருந்தார். முஸ்லிம் அரசியல் தொடர்பாக ஒரு தேடல் அவரிடம் காணப்பட்டது. அந்த அடிப்படையில் அஷ்ரப் ஏனையவர்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 1977 இல் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி (MULF) என்ற கட்சியை ஆரத்பித்து, அதன் சட்ட ஆலோசகராகவும், கோட்பாடு சார்ந்திருந்தார்.
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியில் அரசியல் பயணத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தனது அரசியலை அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் 1980 இல் இணைத்துக் கொண்டார். அதன் பின்னர், 1980, 81 காலப்பகுதியில் காத்தான்குடியில் அஹமட் லெப்பை தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் தோற்றுவிக்கப்பட்டு, அதனோடு அஷ்ரப் போன்றவர்களும் இணைந்து செயற்பட்டார்கள்.
இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு போன்ற காரணங்களால் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவுமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை அரசியல் கட்சியாக 1986 இல் பிரகடனப்படுத்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியின் இஸ்தாபகத் தலைவராகினார்.
இனப்பிரச்சனைக்குத் தீர்வாக 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தினூடாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமையில் 1988 இல் நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலில் வடகிழக்கிற்கு வெளியில் முதன்முதலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு, 12 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.
அத்தோடு, இணைந்த வடகிழக்கு மாகாண சபைத்தேர்தலிலும் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போட்டியிட்டு, 17 ஆசனங்களைக் கைப்பற்றி, வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைமையையும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது.
1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட ரணசிங்க பிரமதாசா அவர்களுடனான பேச்சுவார்தையின் போது, பாராளுமன்றத்தேர்தல் வெட்டுப்புள்ளி 12.5% வீதமாக இருந்ததை 5% வீதமாக குறைத்து சிறுபான்மை, சிறிய கட்சிகளும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு வழியமைத்தார். 1989ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதன்முதலாக பாராளுமன்றம் பிரவேசித்தார்.
இவ்வாறு தனது அரசியல் பயணத்தை தூரநோக்கோடு நன்கு திட்டமிட்டு முன்னெடுத்திருந்தார். அரசியல் அதிகாரங்களாக கப்பல், துறைமுகங்கள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சரவை அமைச்சராகப் பதவி வகித்தார். இக்குறுகிய காலப்பகுதில் இன்றும் பேர் சொல்லும் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், துறைமுக வேலைவாய்ப்புகள் இன்றும் பேசப்படும் விடயங்களாகும்.
இவ்வாறு அரசியலில் அன்றைய சூழ்நிலைக்கேற்ப பல்வேறு கருமங்களை ஆற்றிருந்தார். இனப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் போது, முஸ்லிம்களுக்கும் அவர்களுக்கான பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன், நிர்வாக மாவட்டம், தென் கிழக்கு அலகு போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம்.
ஆயுதப்போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களும் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களை அரசியல் ரீதியாக வழிநடாத்திய தலைவராக மர்ஹும் அஷ்ரப் காணப்படுகிறார். முஸ்லிம் சமூகத்தை ஒரு கட்சியில் ஒற்றுமைப்படுத்தி அதனூடாக உரிமைகளை வென்றெடுக்கவே முயற்சித்தார்.
அன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வுகளை அடையாளப்படுத்தி அவைகளுக்கான கொள்கைகளை வகுப்பதில் கட்சிக்குள்ளும், வெளியிலும் பல புத்திஜீவிகள் அஷ்ரப் அவர்களுக்கு துணையாகச் செயற்பட்டார்கள்.
தனது அரசியல் பயணத்தில் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டிலேயே முக்கிய அரசியல் பதிவிகளைப் பெறும் நிலையை தனது சாணக்கியத்தால் உருவாக்கவும், அன்றைய இனவாத சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்தை நோக்கி திருப்பப்படுவதில் அதன் எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து அதற்குத் தீர்வாகவும் எல்லா சமூகத்தவர்களையும் இணைத்துக் கொண்டு தனது அரசியலை முன்னெடுக்க 1999 இல் புதிய பாதையை 2012 ஐ நோக்கியதாக அமைத்துக் கொண்டார்.
1999 ஆம் ஆண்டு தூரநோக்கு சிந்தனையில் அஷ்ரப் அவர்களால் தேசிய ஐக்கிய முன்னணி அரசியல் கட்சியாக உருவாக்கப்பட்டது.
இதனூடாக பல நகர்வுகளை மேற்கொள்வதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த தலைவர் அஷ்ரப், 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 நாள் ஹெலிகப்டர் விபத்தினூடாக நீங்கா துயரில் எம்மனைவரையும் ஆழ்த்தி விட்டுச் சென்றார். இன்று 20 வது வருடங்கள் பூர்த்தியாகின்றது.
அஷ்ரப் என்ற பல்துறை ஆளுமையின் அனுபவங்களைப் பாடமாகக்கற்று, இன்றைய சூழ்நிலைக்கேற்ப கொள்கைகளை வகுத்து, உரிமைக்கான போராட்டங்களை சமூக மட்டத்தில் புத்திஜீவிகளின் வழிகாட்டுதல்களைப் பெற்று நகர வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.
அன்றைய இனவாதத்தீயை அணைப்பதற்கான தீர்வாக எல்லா இனங்களையும் ஒன்றிணைத்து அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணி அரசியல் ரீதியாக முன்னெடுக்கத்தயாரானார். இன்று இனவாதம் முஸ்லிம் சமூகத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இனவாதிகளுக்கு உச்சாகம் கொடுக்கும் அரசாங்கம் பலமாக அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் பலமிழந்திருக்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தம் மாற்றியமைக்கப்படத் தயாரிகிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில், ஒரே நாடு,ஒரே சட்டம் என்ற போர்வையில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான கேள்வி எழுப்பப்படுகிறது. எனவே, இந்த இக்கட்டான காலப்பகுதியில் தான் மர்ஹும் அஷ்ரப்பை நினைவுகூர்கிறோம். அஷ்ரப் எனும் ஆத்மா சமூகத்தைப் பாடமாகக் கற்றதன் விளைவாகவே தூரநோக்கோடு சமூக அரசியலை முன்னெடுக்க முடிந்தது.
2000 ஆம் ஆண்டு அஷ்ரப் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து முஸ்லிம் அரசியல் பல கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வாறு அரசியல் பிரிப்பின் காரணமாக முஸ்லிம் சமூகமும் பிரிந்து காணப்படுகிறது. தாய்க்கட்சி பலமாக இருந்த காலப்பகுதில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தது.
இவைகளைப் பார்துக்கொண்டிருந்த பேரினவாதம் நாம் பெரும்பான்மையாக இருக்கிறோம். ஆனால், ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக சிறுபான்மையான இவர்கள் இருக்கிறார்கள் என்ற குரோதத்தின் வெளிப்பாடு தாய்க்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தவர்களை ஆளுந்தரப்பு தங்களின் வாசிக்காக அன்று பிரித்து, அரசியல் அதிகாரங்களை வழங்கி பல கட்சிகளை உருவாக்கி மக்களையும் பிரித்து, இன்று முஸ்லிம் சமூகத்தில் அரசியல் ரீதியாக பிரிவினை வருவதற்கு காரணமாக இருந்தார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் சந்தர்ப்பத்திலும், அரசியல் ரீதியாக வேற்றுமை மறந்து ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டிய சந்தர்ப்பத்திலும், தங்களின் தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக குறுநில மன்னர்களான பிராந்திய அரசியல்வாதிகள் முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமைக்குப் பாதகமாகவே செயற்படுவதைக் காணலாம். இவை தேர்தலை இலக்காகக் கொண்டு தாங்கள் வெற்றி பெற்று அதிகாரங்களைப் பெற வேண்டுமென்ற குறுகிய நோக்கமேயன்றி, சமூக நோக்கமல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.
அஷ்ரப் மரணித்ததன் பின்னரான சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகளில் அரசியலை முன்னெடுத்துச் சென்றவர்களுள் இன்றும் ஒரு பிரச்சனை வரும் போது அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து வழிநடாத்திச் செல்லக்கூடியவராக ரவூப் ஹக்கீம் காணப்படுவதை கடந்த நிகழ்வுகள் எமக்கு உணர்த்துகின்றது.
தேர்தல் இலக்கிலிருந்து வெளியேறி புதிய அரசியலமைப்பில் எமது உரிமைகளைப் பாதுகாக்கவும், இனப்பிரச்சனைக்கு புதிய அரசியலமைப்பினூடாக தீர்வை வழங்க அரசாங்கம் முன்வருமாகவிருந்தால், அதில் முஸ்லிம் சமூகத்தின் பங்கை சரியாகப் பெற்றுக்கொள்வதற்கு நாம் ஒன்றுபட்டு ஒரு அணியாக கட்சி வேறுபாடுகளுக்கப்பால் செயற்பட வேண்டும்.
எனவே, மர்ஹும் அஷ்ரப் மரணித்து 20 வது வருடப்பூர்த்தியில், அவர் விரும்பிய சமூக ஒற்றுமையையும், அவரின் கடந்த கால அரசியல் நகர்வுகளையும் பாடமாகக்கற்று, வேற்றுமைகளைக்களைந்து சமூகத்திற்கான அரசியலை முன்னெடுக்க அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சமூகத்தின் எதிர்காலம் கருதி ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
Post a Comment