Top News

மீண்டும் இலங்கையில் இனவாத நஞ்சை ஊட்ட நினைக்கிறதா ராஜபக்ச அரசு? முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நஸீர் காட்டம்.


-ஊடகப்பிரிவு-

மாடுகளை உணவுக்காக வெட்டுவதை தடை செய்யும் சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் மீண்டும் இலங்கையில் இனவாத நஞ்சை ஊட்ட நினைக்கிறதா ராஜபக்ச அரசு? என பாராளுமன்ற வேட்டாளராக போட்டியிட்ட முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் நஸீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி செல்லும் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு வினா எழுப்பினார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கடந்த காலங்களில் மஹிந்த அரசு செய்த தவறை மீண்டும் ஒருமுறை செய்ய முயற்சி செய்கிறது ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் முஸ்லிம்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இன்று அதற்கு மாற்றமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கிறது.

தேர்தலுக்குப் பின்னரும் நமது மாவட்டத்தில் ஒரு சகோதரியின் ஜனாஸா எரிக்கப்பட்டது நம்மால் முடியுமான முயற்சிகளை நாம் செய்தோம்.

 ஜனாஸாக்களை எரிப்பதன் மூலம் இனவாதிகளை சந்தோஷப்படுத்தலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் ஆனால் சிறுபான்மை மக்களின் மனதை வென்றெடுக்காமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதனை நினைக்க தவறிவிட்டார்கள்.

20 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் முஸ்லிம் தனியார் சட்டம் என்பதனை நீக்கி மாடுகளை உணவுக்காக வெட்டுவதை தடை செய்யும் சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் மீண்டும் இலங்கையில் இனவாத நஞ்சை ஊட்ட நினைக்கிறதா ராஜபக்ச அரசு ? என்கின்ற கேள்விகள் நமக்குள் எழுந்து கொண்டிருக்கின்றது அவர்கள் இதனை முஸ்லிம்களின் பிரச்சினையாக மாத்திரம் பார்க்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

இனவாதிகளின் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பாதிக்கப்படப் போவது முஸ்லிம்கள் மாத்திரமல்ல 

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலர் மாட்டுப் பண்ணையாளர்களாக இருக்கிறார்கள் வெளிநாட்டிலிருந்து இறைச்சியை இறக்குமதி செய்தால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாட்டுப்பண்ணையாளர்களின் நிலை என்னவாகும்.

நாம் இந்த விடயங்களை நிதானமாக அணுக வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது இதனை வெறுமனே முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையாக மாத்திரம் காட்டி எதிர்வரும் மாகாண சபைக்கு வாக்குகளை சேகரிப்பதற்கான திட்டத்தையே ராஜபக்ஷ அரசு மிகவும் கச்சிதமாக செய்து வருகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்ட போதும் நம்மால் வெற்றிபெற முடியவில்லை மஹிந்த அரசு போட்ட திட்டம் வெற்றி பெற்று விட்டது. பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஒரு முஸ்லிமும் தெரிவு செய்யப்படக் கூடாது என்பதற்காக ஆளுநரையும் அவரது மனைவியையும் களத்தில் இறக்கி இருந்தார்கள்.

தேர்தல் முடிந்ததும் அவர்களை காண முடியவில்லை அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் மாத்திரமே மீதமாக இருக்கிறது இனி அவர்கள் இந்த மாவட்டத்திற்கு வருவார்களா என்று கூட தெரியவில்லை இன்னுமொரு தேர்தல் வரும்பொழுது இவ்வாறான அரசியல் வியாபாரிகளை இந்த சமூகத்தில் காணலாம்.

புத்தி சாதுரியமாகவும் நிதானமாகவும் நமது காய்நகர்த்தல்களை செய்யவேண்டிய ஒரு காலத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே என்னால் வெற்றி பெற முடியாவிட்டாலும் கடந்த காலங்களில் நான் சேவைகளை செய்து காட்டியிருக்கின்றேன் இனியும் என்னால் முடியுமான சேவைகளை நான் உங்களுக்கு செய்ய காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post