லங்காநிவ்ஸ்வெப் இணையத்தளத்தின் ஆசிரியர் டெஸ்மன்ட் சதுரங்க டி சில்வா கைது செய்யப்பட்ட முறை தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.
நீதித்துறையையும் நீதித்துறைக் கட்டமைப்பையும் எதிர்மறையாகப் பாதிக்கும் விடயங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டதாக அரசியலமைப்பின் 111 சி பிரிவின் கீழ் அவர் மீது குற்றமிழைத்துள்ளதாக சிஐடியின் கணணி குற்றங்கள் பிரிவு செய்த முறைப்பாட்டை அடுத்து ஆகஸ்ட் 31 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டார். இந்த இணையத்தளத்தின் நிர்வாகி என்ற வகையில் கணணி குற்றங்கள் சட்டத்தின் 06 ஆம் பிரிவின் கீழ் நாட்டின் பொது ஒழுங்கைக் குலைக்க முயற்சித்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு செப்டம்பர் 01 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 14 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
லங்காநிவ்ஸ்வெப் தளத்தில் வெளியிடப்பட்ட “ஈஸ்டர் தாக்குதலில் சந்தேகத்துக்குரிய ஹிஜாஸை பிணையில் எடுப்பதற்கு தவறான வழிகள் பின்பற்றப்பட்டுள்ளன. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கதவுகள் ஐந்து மில்லியனுக்காகத் திறக்கப்படுகிறது. நீதிபதிகளும் பணம் பெற்றுக் கொள்கிறார்கள். பிணை வழங்குவதற்குப் பின்னால் கையூட்டு“ எனும் கட்டுரை கவனக்குறைவு தொடர்பில் முறைப்பாடு செய்யத் தக்கதான ஒன்றாக இருந்த போதிலும் கைதும் கூட உரிய முறையில் பிடிவிறாந்து பெறப்பட்டு சட்டபூர்வமாக நடைபெற்ற போதிலும் கைது செய்வதற்காக பெரிய குழுவொன்று சென்றிருந்தமை ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதாக அமைவதாக ஊடக அமைப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
சர்வதேச ஊடகவியலாளர் சங்கத்தில் (IFJ) அங்கத்துவம் பெற்றுள்ள சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இருந்த போதிலும், நீதிமன்றத் தீ்ர்ப்புக்களின் நேர்மறையான பகுப்பாய்வு, நீதிமன்றங்களின் செயற்பாடுகளை ஆராய்வது மற்றும் அதன் முறைகேடுகளைப் பற்றி அறிக்கையிடுதல் ஆகியவற்றைப் பறிக்கும் செயல்முறையாக இந்தச் சம்பவம் அமையாது எனவும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.
இதேவேளை சதுரங்கவின் கைது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள தெற்காசிய சுதந்திர ஊடக சங்கத்தின் இலங்கைப் பிரிவு, ஊடகவியலாளரின் கைது தொடர்பில் அரசாங்கம் உரிய முறைகளைப் பேணியதை வரவேற்றிருக்கிறது.
Post a Comment