மக்களுக்கு வாழவே முடியாத இந்த காலத்தில், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து பயனில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து இந்த அரசாங்கத்தால் தப்பித்துக் கொள்ள முடியாது. நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மனித வளமும், யானை வளமும் அழிவடைந்து வருகிறது. இந்த இரண்டு வளங்களையும் ஒரு சரியான திட்டமிடலின் ஊடாக மட்டுமே காப்பாற்ற முடியும்.
இதற்கு துரிதமாக தீர்வொன்றை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம், உறுதியாக இருக்கிறோம். அரசாங்கமும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கித்தான் தேர்தலில் வெற்றிப் பெற்றீர்கள்.
இதனை நம்பித்தான் மக்களும் இரண்டு தேர்தல்களிலும் வாக்களித்தார்கள். எனவே, மக்கள் எதிர்ப்பார்க்கும் சேவையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
இன்று வாழ்க்கைச் சுமை வானைத் தொட்டுள்ளது. 20யை கொண்டுவந்து ஜனநாயகத்தை அழிக்கவும் அரசாங்கம் முயற்சிக்கிறது.
இதற்காகத் தானா மக்கள் இந்த அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள். மக்களுக்கு வாழவே முடியாத இந்த நிலையில், அரசியலமைப்புக்களை மாற்றி எந்தப் பயனும் கிடையாது.
அரசாங்கத்தின் பேச்சுக்கும் செயற்பாட்டுக்கும் இடையில் பாரிய இடைவேளி உள்ளது. எவ்வாறாயினும் நாம் அரசாங்கம் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment