20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவை உருவாக்கியது தான் அல்ல எனவும், அதனை சட்ட வரைவு திணைக்களம் உருவாக்கியதாகவும் அந்த திணைக்களம் நீதிமைச்சின் கீழ் வருவதால், அமைச்சரவையின் சார்பில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மாத்திரமே தான் மேற்கொண்டதாகவும் நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி - 20வது திருத்தச்சட்டத்தை உருவாக்கியது நீங்களா?
பதில் - நான் இல்லை. 20வது திருத்தச் சட்டம் என்பது 19வது திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு, முன்னர் இருந்த நிலைமைக்கு செல்வது மாத்திரமே. அமைச்சரவை கூட்டாக எடுத்த மற்றும் வழங்கிய ஆலோசனைக்கு அமைய சட்ட வரைவு திணைக்களம் அந்த திருத்தச் சட்ட வரைவை உருவாக்கியது. 20வது திருத்தச் சட்டம் ஒரு வரைவாக மாத்திரமே தற்போது உள்ளது.
கேள்வி- எனினும் இதற்கு தலைமை தாங்குவதாக நீங்களே கூறினீர்கள். இறுதி இதனை நீங்கள் உருவாக்கவில்லை. வேறு சிலரா உருவாக்கினர்?.
பதில் - இல்லை. அமைச்சரவை. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 42 வது ஷரத்திற்கு அமைய சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கே உள்ளது.
அமைச்சரவை வழங்கும் ஆலோசனைக்கு அமைய அவை உருவாக்கப்படும். சட்ட வரைவை உருவாக்கும் திணைக்களம் எனது அமைச்சின் கீழ் இருப்பதால், நானே அமைச்சரவையின் சார்பில் ஒருங்கணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
இந்த திருத்தச் சட்டத்தில் இருப்பது 19வது திருத்தச் சட்டத்திற்கு முதல் இருந்த 18வது திருத்தச்சட்டத்தின் ஏற்பாடுகள்.
கேள்வி - இந்த திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற நீங்கள் எப்படி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள போகிறீர்கள்?
பதில் - நாங்கள் அதனை பெற்றுக்கொள்வோம். ஏற்கனவே எமக்கு 150 உள்ளது. 146 உறுப்பினர்கள் எமது கட்சியினர். மேலும் 4 பேர் எம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டவர்கள்.
மேலும் எமது கட்சிக்கு வர முயற்சிக்கும் 15 பேர் இருக்கின்றனர். இவை அனைத்தையும் கூட்டினால் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment