- க.கிஷாந்தன்
" பிரச்சினைகளைப் பேசி காலத்தை ஓட்டுவதைவிடவும், தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக்கொண்டதே எனது அரசியல் பயணம். அவ்வாறு தற்போது செயற்பட்டும் வருகின்றேன்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் இரண்டு மாடிக் கட்டடம் இன்று (04) திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைமூலம் எனது அமைச்சுக்கு ஆயிரத்து 56 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த நான்கரை வருடங்களில் கடன் அடிப்படையிலேயே மலையகத்தில் வேலைகள் நடந்துள்ளன. அவற்றை மீள செலுத்த வேண்டியுள்ளது.
முதலில் அடிக்கல் நாட்டவேண்டும், கட்டிடத்தை நாமே திறந்து வைக்க வேண்டும் என்ற குறுகிய அரசியல் நோக்கில் திட்டங்களை உரிய வகையில் செய்யவில்லை. எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும், பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்.
பிரச்சினைகளை பேசி, பேசி காலத்தை ஓட்டமுடியாது. நீங்கள் பாடசாலை பிரச்சினையை அறிவித்தீர்கள். இன்று தீர்வை வழங்கினோம். மைதானம் தேவையென கூறினீர்கள். இட ஒதுக்கீடு தொடர்பில் கம்பனியுடன் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு மைதானப்பணியும் ஆரம்பமாகும். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளேன்.
அதேவேளை, கல்வி என்பது புத்தக படிப்பு மட்டும் அல்ல, அதனையும்தாண்டி பல விடயங்கள் உள்ளன. விளையாட்டு உட்பட பல் துறைகளில் மாணவர்களால் சாதிக்க முடியும் அதேபோல் அமைதி, அமைதி எனக்கூறி மாணவர்களை முடக்காமல், அவர்களுக்கு கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளை ஆசிரியர்கள் வழங்கவேண்டும். அப்போதுதான் திறந்த தலைவர்களை உருவாக்கமுடியும். " - என்றார்.
Post a Comment