Headlines
Loading...
மாலைதீவுடன் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சர் டக்ளஸ் முயற்சி

மாலைதீவுடன் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சர் டக்ளஸ் முயற்சி


கடற்றொழில்சார் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான விடயங்களில் மாலைதீவுடன் தொழில்நுட்ப, அறிவுசார் அனுபங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எல்லை தாண்டுகின்ற சந்தர்ப்பங்களில் மாலைதீவில் கைது செய்யப்படுகின்ற இலங்கை கடற்றொழிலாளர் விவகாரத்தை இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றின் ஊடாகக் கையாள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் ஓமர் அப்துல் ரசாக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று (26) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே அமைச்சரினால் குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

குறித்த சந்திப்பின் போது மாலைதீவின் கடலுணவு மற்றும் கடலுணவுசார் உற்பத்திகளுக்கு இலங்கையில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்ற நிலையில், கொவிட் 19 காரணமாக அண்மைக் காலமாக குறித்த இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கவலை வெளியிட்ட மாலைதீவு தூதுவர், குறித்த தடையினை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தார்.

மேலும், அண்மைக்காலமாக இலங்கையில் கடற்றொழில் செயற்பாடுகள், மீன்பிடி இறங்குதுறைகள் விபரங்கள் மற்றும் நீர்வேளாண்மை முன்னேற்றங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்னாயக்காவிடம் மாலைதீவுத் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், கடற்றொழில்சார் விடயங்களில் மாலைதீவின் தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் அனுபங்களை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதேபோன்று நீர்வேளாண்மையில் இலங்கையின் அறிவுசார் அனுபங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் பரிமாற்றங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவினை மேலும் வலுப்படுத்தும் என்ற வகையில் குறித்த கருத்தினை வரவேற்றார்.

அத்துடன், எல்லைத் தாண்டுகின்ற சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்கள் மாலைதீவினால் கைது செயய்ப்படுகின்ற சம்பங்கள் அடிக்கடி நடைபெறுகின்றமையினால் குறித்த விவகாரத்தினை கையாளுவதற்கு இரண்டு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்ததுடன் அதுதொடர்பான மாதிரி வரைபினை இலங்கை கடற்றொழில் அமைச்சு உருவாக்கித் தருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கொவிட் 19 காரணமாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள மாலைதீவு கடற்றொழில்சார் உற்பத்திகளின் இறக்குமதிகளை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடடி விரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

0 Comments: