இலங்கையில் பயங்கரவாதிகளை நினைவுகூர ஒருபோதும் அனுமதியில்லை. திலீபனும் பயங்கரவாதியே. எனவே, அவரை நினைவுகூருவோர் உடன் கைதுசெய்யப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றங்கள் விடுத்துள்ள தடையுத்தரவு தொடர்பிலும், தடையுத்தரவை மீறித் திலீபனை அஞ்சலித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை குறித்தும் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திலீபன் சாதாரண பொதுமகன் அல்லர். அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவர். இராணுவத்தினருக்கு எதிராகப் போரிட்டவர்.
போரில் பலத்த காயமடைந்து பல நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பிரபாகரனின் வலுக்கட்டாயத்தின் பேரில் 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து இறுதியில் உயிரிழந்தார். திலீபன் ஒரு பயங்கரவாதி. எனவே, இந்த ஆட்சியில் பயங்கரவாதிகளை நினைவுகூர ஒருபோதும் அனுமதியில்லை.
வடக்கு, கிழக்கில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் வழங்கிய தடையுத்தரவுகளை நாம் வரவேற்கின்றோம். அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு.
இதை மீறி திலீபனை நினைவுகூர முற்படுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி கைதுசெய்யப்படுவார்கள்.
நீதிமன்றங்களின் உத்தரவுகளை எவரும் மீற முடியாது. அதை எவரும் சவாலுக்குட்படுத்தி கருத்துக்களை வெளியிடவும் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment