முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 5 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார். இதனையடுத்து முன்னாள் பிரதமர் எதிர்வரும் 6 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்த சில பிரதான அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு கட்டாயம் பதிலளிக்க போவதாகவும் அத்துடன் மேலும் பல விடயங்களை வெளியிட உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.
அதேவேளை ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலருடன் கலந்துரையாடியுள்ளார்.
“ எதிர்வரும் 6 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நான் செல்வேன். அங்கு பல விடயங்கள் வெளியாகும் ” என முன்னாள் பிரதமர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினரும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டதுடன் அது ஜனாதிபதி ஆணைக்குழுவில் அதிகாரிகள் சிலர் வழங்கிய சாட்சியங்கள் மூலம் உறுதியானது.
Post a Comment