(எம்.ஜே.எம் பாரிஸ்)
பொலிஸார் தமது கடமைகளை சரியாக மேற்கொள்ளாமையின் விளைவாகவே, போதைப்பொருட்களின் பாவனை சமூகத்தில் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்:-
அரசாங்கத்தினால் பொலிஸாருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால்தான் அனைவருக்கும் சீருடையும் ஆயுதமும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பொறுப்பை உணர்ந்து செயற்படுவது பொலிஸாரின் கடமையாகும். இதனைத் தான் பொது மக்களும் எதிர் பார்க்கிறார்கள். சில சிறப்பான பொலிஸார் இருக்கும் நேரத்தில் சில மோசமான பொலிஸாரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சில பிரதேசங்களில் 10 அடிக்கும் மேல் வளர்ந்த கஞ்சா செடிகள் பிடிபட்டுள்ளன. ஒரு கஞ்சா செடி 10 அடிவரை வளரும் அளவுக்கு பொலிஸார் அசமந்தமாக இருக்கிறார்கள் என்றே கூறவேண்டும்.
S.T.F சென்று தான் அவற்றைப் பிடிக்கிறார்கள். அத்தோடு, இவ்வாறான பாரிய செய்கைகளை இலகுவாக செய்துவிட முடியாது. பெக்கோ இயந்திரம் மூலமாகத்தான் மண் நிரப்பப்பட்டு, கஞ்சா செடிகள் ஏக்கர் கணக்கில் பயிரிடப்படுகின்றன.
இதையெல்லாம் அவதானிக்காமல் பொலிஸார் என்ன செய்கிறார்கள்? குறைந்தது, தமது பிரதேசத்தில் வளரும் கஞ்சா செடியைக்கூட கண்டுப்பிடித்துக் கொள்ள முடியாவிட்டால், வெட்கப்பட வேண்டும்.
சில பிரதேசங்களில் பொலிஸார் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்றேதான் கூறவேண்டும். இவ்வாறான சூழலை மாற்றியமைக்க வேண்டும் என்றுதான் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜனாதிபதிக்கு வழங்கினார்கள் என தெரிவித்தார்.
Post a Comment