புல்மோட்டை கனியமணல் கூட்டுத் தாபனத்தில் வேலைக்கு சென்ற ஹாலிசா என்ற முஸ்லிம் பெண்ணை அபாயா ஆடை அணிந்து வேலைக்கு வரக்கூடாது என்றும் சாரி அணிந்து தான் வேலைக்கு வரவேண்டும் என்றும் நிர்பந்திக்கப்பட்டதை அடுத்து அவர் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார்.
ஹாலிஸா என்ற குறித்த பெண் ஓர் ஆலிமாவும் பட்டதாரியுமாவார் அவர் கடந்த 6 ஆண்டுகளாக கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்து வருகிறார்.
அங்கு 9 முஸ்லிம் பெண்கள் கடமையாற்றுகின்றார்கள். இவர்கள் இருவர் சாரி அணிந்தே வேலைக்கு செல்வதை வழமையாக கொண்டுள்ளார்கள். ஏனைய 07 பேரும் அபாயா அணிந்து வேலைக்கு சென்ற நிலையில் புதிய அரசு பதவிக்கு வந்த பின்னர் நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் அவர்கள் அனைவரும் சாரி அணிந்தே வேலைக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஹாலிஸா தான் ஓர் ஆலிமா என்பதால் சாரி அணிந்து வேலைக்கு செல்வதற்கு மறுத்துள்ளார். அபாயா அணிந்து வேலைக்கு சென்ற ஹாலிஸா தவிர்ந்த மீதி 6 பெண்களும் தமது வேலை பரிபோகும் என்பதினால் கடந்த ஜனவரி மாதம் முதல் சாரி அணிந்தே வேலைக்கு செல்கின்றனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஹாலிஸா “நான் சாரி அணியாமல் அபாயாவுடன் வேலைக்கு சென்ற போது கூட்டுத்தாபன நிர்வாகத்தினால் எனக்கு பல அளுத்தங்கள் வழங்கப்பட்டன. சனி, ஞாயிறு தினங்களில் மேலதிக வேலைகள் செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டது. நான் விடுமுறை எடுத்தால் சம்பளம் குறைக்கப்படும் என மிரட்டப்பட்டேன்.
கடந்த 11.09.2020 அன்று நான் சுகயீன விடுமுறை பெற்றுக் கொள்வதற்காக நிறுவனத்திற்கு சென்ற போது அபாயாவுடன் உள்ளே வரமுடியாது என்றும், அபாயா அணிந்து கொண்டு உள்ளே வர அனுமதித்தவர்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என மனித வள முகாமையாளர் தெரிவித்தார். பிரதி முகாமையாளரும் சாரி அணிந்தே நான் வேலைக்கு வர வேண்டும் என பணித்தார்.
இந்நிலையிலேயே சாரி அணிந்து எனக்கு வேலைக்கு வர முடியாது எனக் கூறி வேலையை ராஜினாமா செய்தேன்.
இவ்விவகாரம் தொடர்பில் பள்ளிவாயல் நிர்வாகம், புல்மூட்டை ஜம்மிய்யதுல் உலமா சபை, சட்டத்தரணிகள் என்போர் மூலம் கடந்த ஒரு வருட காலமாக போராடியும் தீர்வு கிடைக்காமை காரணமாகவே எனது வேலையை இராஜினாமா செய்தேன் தற்போது மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட தீர்மானித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
Post a Comment