Top News

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் கைது செய்யப்படுவாரா மைத்திரிபால..?


ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

தமது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவுகளில் அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர் என சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார, ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தாக்குதல் தொடர்பான பொறுப்பை ஏற்று பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு முன்னாள் ஜனாதிபதி, பூஜித ஜயசுந்தரவிடம் கோரியதாக குறிப்பிட்டிருந்தார்.

அப்படி விலகினால், ஆணைக்குழுவில் அறிக்கையை மாற்றி பணி ஓய்வுடன் வெளிநாடு ஒன்றின் தூதுவர் பதவியை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி, பூஜித ஜயசுந்தரவுக்கு அறிவித்திருந்தார் எனவும் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கிய இந்த சாட்சியம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் ஹேமசிறி பெர்னாண்டோ கூறிய விடயங்களை மறுத்து முன்னாள் ஜனாதிபதி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post