ஈஸ்டர் ஞாயிறு தினம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக 20ஆம் திகதி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவல் குறித்து தனக்கு தெரியப்படுத்தாதது ஒரு புதிராக இருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி எம்.ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
20 ஆம் திகதி கிடைத்த தகவலை தனக்கு தெரியப்படுத்தி இருந்தால், முழு கொழும்பையும் முற்றுகையிட்டு சோதனை சாவடிகளை அமைத்து பல விடயங்களை செய்வதற்கான சந்தர்ப்பம் இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
சாட்சியத்தை நெறிப்படுத்திய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விபரமான ஆவணம் ஒன்றை காண்பித்து இதற்கு முன்னர் இதனை கண்டுள்ளீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள லத்தீப், ஜனாதிபதி ஆணைக்குழுவிலேயே தான் இதனை முதல் முறையாக காண்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கிழக்கு மாகாணத்தில் விசேட அதிரடிப்படையின் முகாம் இருந்ததால், அந்த மாகாணம் சம்பந்தமாக சந்தேகம் ஏற்படவில்லை எனக் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள லத்தீப், பொலிஸ் விசேட அதிரடிப்படை சம்பந்தமான பொலிஸ் மா அதிபருக்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்திருந்தால், ஏன் தனக்கு தகவல் வழங்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் தனக்கும் இடையில் போதுமான தொடர்புகள் இருக்கவில்லை எனவும் பல்வேறு நிர்வாக ரீதியான பிரச்சினைகள் காரணமாக தொடர்புகள் பழுதுப்பட்டிருந்தது எனவும் லத்தீப் தெரிவித்துள்ளார்.
எனினும் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் என்பன பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்த பின்னர் இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஒத்துழைப்புகள் இருந்தன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment