2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்தத்தின் போது காணாமல் போய் 16 வருடங்களுக்கு பின்னர் தமது பிள்ளையை கண்டறிந்துள்ளதாக சம்மாந்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் ஊடகங்களிடம் வெளியிட்ட கருத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பிள்ளையை வளர்த்தாக கூறப்படும் அம்பாறை - புத்தங்கல பகுதியை சேர்ந்த நூரல் இன்சான் என்ற 42 வயதுடைய பெண்ணொருவர் சம்மாந்துறை காவல்துறையில் முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண், ஆழிப்பேரலையின் போது காணமால் போன தனது மகனை 16 வருடங்களுக்கு பின்னர் கண்டறிந்துள்ளதாக அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
சம்மாந்துறை - மாளிகைக்காடு பகுதியில் ஆழிப்பேரலை தாக்கிய வேளை, அப்போது 5 வயதாக இருந்த ராஸீன் மொஹமட் அக்ரம் ரிஸ்கான் என்ற தமது மகன் காணாமல் போனதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் பல வருடங்களுக்கு பின்னர் தமது மகனை கண்டறிந்துள்ளதாக கூறிய குறித்த பெண், அம்பாறை பகுதியில் உள்ள பெண்ணொருவர் தமது மகனை வளர்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
குறித்த விடயத்தினை ஊடகங்களுக்கு அவர் வெளியிடும் போது காணாமல் போயிருந்ததாக கூறப்படும் அந்த சிறுவனும் அங்கிருந்தார்.
எனினும் தமது தாய் யார் என உறுதியாக தமக்கு அறிப்படுத்துமாறு குறித்த இளைஞன் கோரியுள்ளார்.
Hiru சேவை அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் தமக்கு இரண்டு பிறப்புச் சான்றிதழ்கள் காணப்படுவதாகவும், தம்மை வளர்த்த தாயிடம் உள்ள பிறப்புச் சான்றிதழில் தமது பெயர் மொஹமட் சியான் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த இளைஞர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த சிறுவன் மற்றும் அம்பாறை - புத்தங்கல பகுதியை சேர்ந்த பெண்ணும் இன்று சம்மாந்துறை காவல்துறைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காகவே அவர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் குறித்த இளைஞன் தமது மகன் என கூறிய பெண்ணையும் இன்று காவல்துறையில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, குறித்த இளைஞன் தமது மகன் என்றும் தாமே அவரை ஈன்றெடுத்துள்ளதாகவும் அம்பாறை - புத்தலங்க பகுதியை சேர்ந்த நூரல் இன்ஸான் என்ற பெண் குறிப்பிட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் Hiru செய்தி சேவை, அம்பாறை பகுதிக்கு பொறுப்பான உயர் காவல்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு வினவியது.
இதற்கு பதில் வழங்கிய அவர், இரண்டு தரப்பினரையும் அழைத்து இன்று -01- வாக்குமூலங்கள் பதிவு செய்து கொண்டதாக குறிப்பிட்டார்.
உண்மையான தாய் யார் என உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் நாட்களில் மரபணு பரிசோதனை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் Hiru செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
Post a Comment