கல்முனையில் நகர சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

ADMIN
1 minute read
0


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஒழுங்கு செய்யப்பட 'சேர்ந்து காப்போம்' 'பாதையில் குப்பை போட வேண்டாம்' எனும் தொனிப்பொருளிலான நகர சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர பிரதேசங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபை, கல்முனை பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், கல்முனை இராணுவம் முகாம் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையம் என்பவற்றின் கூட்டிணைந்த ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இச்சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தில் வர்த்தகர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளும் நகர சுத்தப்படுத்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

கல்முனைப் பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் எம்.தர்மசேன, கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் நகர சுத்தப்படுத்தல் சிரமதான பணிகள் இடம்பெற்றன.

கல்முனை மாநகர சபை முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இச்சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களின் பிரதான வீதிகள் முழுவதும் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.
To Top