சிறுவர்கள் தங்கள் உலகை எப்போதும் வியப்போடும் ஆய்ந்தறிகின்ற ஆர்வத்தோடும் காண்கிறார்கள். அவர்களின் கனவுகளுக்கு ஆயுள் கொடுக்கின்ற அவகாசத்தை நாம் தோற்றுவிக்க வேண்டியுள்ளது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்துள்ளார்.
"ஒரு சமூகத்தினுடைய ஆத்மாவின் நிலை பற்றிய மிகத் தெட்டத்தெளிவான சமிஞ்சை, அந்தச் சமூகம் குழந்தைகளை எப்படி நடத்துகிறது என்பதிலேயே தங்கியிருக்கிறது" என்று நெல்சன் மண்டேலா கூறிய கருத்தை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்று சிறுவர்கள் தின வாழ்த்துச் செய்தியில் அவர் சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வெற்றியைப் பெறுகின்ற சிறுவர்களை ஊக்கப்படுத்தும் நாம், தோல்வியைக் கண்டு துவண்டுவிடக் கூடாது என்ற உண்மையையும் உத்வேகத்தையும் வழங்க வேண்டும். முயற்சிகள் மூலமாக எதனையும் சாதிக்கலாம். கனவுகளை வெல்வதற்கு விடாமுயற்சி முக்கியமானது என்பதை அவர்களின் மனதில் விதைக்க வேண்டும்.
ஒரு சமூகமாக எமது சிறுவர்களை நற்பண்புகளோடு வளர வைக்கின்ற மிகப் பெரிய பொறுப்பு நம்மெல்லோருக்கும் இருக்கிறது. சகமனிதர்களை மதித்து மரியாதை செய்கின்ற பண்பை நாம் சிறுவர்களின் மனதில் நிறைவாக நிரப்ப வேண்டும். நமது வாழ்வை முக்கியமானதாக மாற்றுகின்ற அளப்பரிய சக்தி சிறுவர்களுக்கே உண்டு. சமூகச் சூழலில் அதி உன்னதமான வளமாக இருப்பவர்களும் சிறுவர்கள் தான். அவர்களின் கட்டற்ற கற்பனாசக்திக்கு நிகர், அவர்களேதான்.
அற்புதமான அழகிய பண்புகளோடு நம் சிறுவர்கள் வளர்கின்ற போது, அவர்கள் மகத்துவம், விழுமியம், நம்பிக்கை, நற்சிந்தனை ஆகியவற்றைக் கொண்டு அவர்களைப் பின்தொடர்கின்ற சந்ததிக்கும் உத்வேகம் கொடுக்கின்ற அற்புதமானவர்களாய் உருவெடுப்பார்கள்.
இலங்கை இன்று சிறுவர்கள் தினத்தை கொண்டாடுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் சிறுவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் உள்ளது. சர்வதேச சிறுவர் தினம் ஜூன் 1 மற்றும் உலகளாவிய சிறுவர்கள் தினம் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில், சிறுவர்கள் தினம், அதன் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 கொண்டாடப்படுகிறது.
இன்றைய நாளில், சிறுவர்கள் அனைவருக்கும் எனது சிறுவர்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தனை சிறுவர்களின் முயற்சிகளும் வெற்றி காண இறைவன் துணைநிற்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Post a Comment