- எஸ். ஹமீத் -
கொழும்பு தெமட்டகொட பகுதியில் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மாரடைப்பு. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மரணித்துவிட்டார். ஜனாஸா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது.
நேற்று -06- உறவினர்கள் சிலர் பணம் கொடுத்து, மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். சில இறந்த உடல்கள் பொலித்தீன் பையினால் முற்றாக மூடப்பட்டிருக்க இந்த மையித்து துணியினால் சுற்றப்பட்டிருந்தது. அதுபற்றி உறவினர்கள் விசாரிக்க, பொலித்தீன் உறைகளினால் மூடப்பட்டிருப்பவை கொரோனா தொற்றுக்குள்ளானவையென்றும் துணியினால் சுற்றப்பட்டிருப்பவை கொரோனா தொற்றில்லாதவை என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்று -07- காலை இறந்தவருக்கு கொரோனா இல்லையென்றும், ஜனாஸாவை எடுத்துச் செல்லும்படியும் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. உறவினர்கள் மையித்தை எடுத்துவரும் ஏற்பாட்டைச் செய்து கொண்டிருக்கையில், இன்னொரு தொலைபேசி. இறந்தவருக்கு கொரோனா பொஸிட்டிவ் என்றும் வீட்டிலுள்ள ஆண்களை மருத்துவமனைக்கு வருமாறும் ஜனாஸாவுக்கான தகனப் பெட்டி மற்றும் தனிமைப்படுத்தல் விடயமாகப் பேசவேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைக் கேட்டதும் மையித்து வீட்டினர்க்கு அதிர்ச்சியும் உச்சக்கட்ட துக்கமும் ஏற்பட அவர்கள் செய்வதறியாது இப்போது விக்கித்து நிற்கின்றனர்.
இரக்கமுள்ள எங்கள் றப்பே...எல்லாம் வல்லவனே...ஏகனே..யா அல்லாஹ்...
இந்த அநியாயங்களுக்கெல்லாம் உன் அருள் கொண்டு உடனடியாகவே ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிடுவாயாக! ஆமீன்!
Post a Comment