Top News

அட்டாளைச்சேனை மர்ஹூம் 'சின்னாலிம்'

 

(ஐ.எல்.எம். தாஹிர்)


அட்டாளைச்சேனையில் பிரபல்யம் பெற்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர் மர்ஹூம் 'சின்னாலிம்' ஆவார். முஹம்மது அலி ஆலிம் என்பது இவரது முழுப் பெயர். 1921-08-28 ஆம் திகதி அட்டாளைச்சேனையில் நல்லதொரு குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை பிரபல்யம் பெற்ற தச்சுத் தொழிலாளியானதால் குடும்ப சகோதரர்களுள் சிலரும் இத் தொழிலில் தேர்ச்சி பெற்று விளங்கினர். அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் அப்போது காணப்பட்ட மரத்தினாலான தூண்கள் இவரின் தகப்பனாரினால் நிர்மாணிக்கப்பட்டவையாகும்.


அட்டாளைச்சேனை சாதனா பாடசாலையில் அறபு ஆசிரியராக நீண்ட காலம் கடமையாற்றிய இவர் ; இஸ்லாம் பாடம் கற்பிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.


தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலயம், பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயம், இறக்காமம் அல்-அஷ;ரஃப் மகா வித்தியாலயம், அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் சேவையாற்றிய 'சின்னாலிம்' அவர்கள் 1978 ஆம் ஆண்டு தனது 57 ஆவது வயதில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.


இதன் பின் அவர் நிந்தவூர் காசிபுல் உலூம் அறபுக் கல்லூரி அதிபராகவும், அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றியதோடு அக்கரைப்பற்று மன்பஉல் கைறாத் அறபுக் கல்லூரியிலும் கடமை புரிந்தார். அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் வட பகுதிப் பரிபாலன சபையின் செயலாளராகவும், அட்டாளைச்சேனை இணக்க சபைத் தலைவராகவும் கடமையாற்றியதோடு, நீண்ட காலமாக ஒலுவில் பெரிய பள்ளிவாசலில் பேஷ; இமாமாகக் கடமையும் பார்த்தவர். அக்காலத்தில் ஒலுவில் பள்ளிவாசலில் தொழுகைக்கு மிகக் குறைந்த மக்களே வரவாகியிருந்த நிலையில் கவலைப்பட்ட மர்ஹூம் 'சின்னாலிம்' அவர்கள் பள்ளிவாசல் முழுவதும் தொழக்கூடியளவுக்கு மக்கள் வருகையைப் பெருக்கி பாரிய மாற்றமொன்றை ஏற்படுத்தியமை இங்கு அவருக்கான சிறப்பம்சமாகும். 


எங்களுக்குச் சிறுவயதில் இஸ்லாம் பாடம் கற்பித்துத் தந்த அன்னார் ; அவருக்கான வகுப்பு நேரத்தையும் எடுத்துக்கொள்வதுடன் மேலதிகமான பாட நேரத்திலும் அலுப்புத் தட்டாமல் உற்சாகத்துடன் பாடம் சொல்லித் தந்தவர். 


மர்ஹூம் 'சின்னாலிம்' அவர்களின் விசாலமான குடும்பம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை, காலி – கந்தறை, அட்டுளுகம, திகாரிய, மக்கொனை, மத்துகம – பலாந்தை, போன்ற ஊர்களில் பரந்து பட்டு வாழ்ந்து வருகின்றனர். 


கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் 1993 ஆம் ஆண்டு எம்மை விட்டும் அன்னார் பிரிந்து விட்டார் - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.


அவர் புரிந்த நன்மைகளை வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வதோடு அன்னாரின் பாவங்களை மன்னித்து அவரது கப்றினை ஒளி மயமாக்குவதோடு உயர் சுவர்க்கமான 'ஜென்னத்துல் பிர்தௌஸ்' கிடைக்கவும் பிரார்த்திப்போம்.

Post a Comment

Previous Post Next Post