நூருல் ஹுதா உமர்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்றும் இதன் பின்னால் இஸ்ரேல் உளவுப்படை இருந்ததா என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்போது கேட்பதன் மூலம் இவரும் அமைச்சராக இருந்த அரசாங்கத்திடம் இதனை கேட்காமல் கோழையாக தூங்கிக்கொண்டிருந்தாரா என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது
ஈஸ்டர் தாக்குதலை இயக்கியவர்கள், தயாரித்தவர்கள் யார் என ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கேட்டுள்ளார். இதே கேள்வியைத்தான் நாம் அவரிடமும் அவரும் அமைச்சராக இருந்த நல்லாட்சி அரசிடமும் கேட்கின்றோம். தாக்குதலின் பிரதான மூளையாக நவ்பர் மௌலவி இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற ஹக்கீமின் கருத்தை நாமும் சொல்லி வருகின்றோம். காத்தான்குடி நவ்பர் மௌலவி என்ற ஒருவர் முஸ்லிம் சமூகத்துள் அறியப்பட்டிருக்கவில்லை. அவர் ஆயுத தீவிரவாத கருத்துக்களை பிரச்சாரம் செய்ததாக பிரசுரங்களோ, புத்தகங்களோ வெளியிட்டதாக நாம் காணவில்லை.
ஆனாலும் நவ்பர் மௌலவியை கைது செய்தது எமது ஜனாதிபதி கோட்டாபயவின் அரசு அல்ல, மாறாக ஹக்கீமின் அரசுதான் கைது செய்து சிறையில் அடைத்தது. ஹக்கீம் சொல்வது போல் நவ்பர் மௌலவி பிரதான சூத்திரதாரியல்ல என்றிருப்பின் ஹக்கீமின் அரசு ஏன் அவரை கைது செய்தது? அந்த கைதுக்கெதிராக ஏன் ஹக்கீம், தான் கொண்டு வந்த ஜனாதிபதியிடமும் தான் முட்டுக்கொடுத்த பிரதமர் ரணிலிடமும் இதனை கேட்கவில்லை. கேட்க முடியாத கோழையாக விலை போனவராக அல்லது நல்லாட்சி அரசுதான் ஸஹ்ரானை இயக்கியது என்று அறிந்தும் மௌனமாக இருந்தாரா என்று கேட்கிறோம்.
இதன் பின்னனியில் இஸ்ரேல் இருந்திருந்தால் இஸ்ரேலுக்கு நெருக்கமாக இருந்த ரணில் அரசாங்கத்தில் ஹக்கீம் ஏன் வாய்மூடி பார்த்துக்கொண்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ அரசு இஸ்ரேலுக்கெதிரான அரசு என்றும் பலஸ்தீன அபிமாணி என்பதும் உலமா கட்சி ராஜபக்ஷாக்களை ஆதரிப்பதற்கான பிரதான காரணமாகும். இஸ்ரேல் ஆதரவு பெற்ற ரணில் அரசை ஆதரிக்க வேண்டாம் என ஹக்கீம் போன்ற முஸ்லிம் கட்சிகளிடமும் முஸ்லிம் சமூகத்திடமும் நாம் கெஞ்சிக்கேட்டோம்.
பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்ட முஸ்லிம் கட்சிகள் ரணில் ஆட்சிக்கு வாக்களித்து விட்டு இப்போது இத்தாக்குதல் பின்னால் இஸ்ரேல் உள்ளதா என ஹக்கீம் கேட்பதன் மூலம் மிகப்பெரிய ஜோக்கராக மாறியுள்ளார். ஆக குறைந்தது இந்த தாக்குதல் கோட்டாபயவின் ஆட்சியில் நடக்கவில்லை, ஹக்கிமும் அமைச்சராக சுகம் அனுபவித்த ரணில், மைத்திரி ஆட்சியில்தான் நடந்தது என்ற ஞாபகமாவது ஹக்கீமுக்கு உண்டா என கேட்கிறோம்.
ஆகவே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை ஹக்கீமும் அவரது நல்லாட்சி அமைச்சரவையுமே தெளிவு படுத்த வேண்டும். இப்படியொரு தாக்குதல் நடை பெறப்போகிறது என்று முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் ஹரின் பெர்னான்டோ போன்றோருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும் போது நிச்சயம் அது பற்றி ரணிலின் வலது கையாக இருந்த ரவூப் ஹக்கீமுக்கு தெரியாமல் இருந்திருக்காது. ஆகவே இப்படியான கேள்வியை இந்த அரசாங்கத்திடம் கேட்காமல் தான் கொண்டுவந்த ரணில் அரசிடமே கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment