கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயங்களிலிருந்து வெளி வலயங்களுக்கு இடமாற்றப்பட்ட அதிபர்களின் இடமாற்றங்கள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிபர் இடமாற்ற மேன்முறையீட்டு சபையின் தீர்மானத்துக்கமைவாக இந்த இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களுக்கான இடமாற்றத்தில் சில குளறுபடிகள் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன் பாதிக்கப்பட்ட அதிபர்களின் மேன்முறையீடுகளும் கிடைக்கப்பெற்றிருந்தன.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நேற்று (07) இடம்பெற்ற அதிபர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை கூட்டத்தின்போது இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. இதன்போதே கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயங்களிலிருந்து வெளி வலயங்களுக்கு இடமாற்றப்பட்ட அதிபர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இனிவரும் காலங்களில் இடமாற்ற சபைகளில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அங்கம் வகிக்க கூடாது எனவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மாத்திரம் அனுமதிக்கப்படல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபை தொடர்பான சுற்றறிக்கை திருத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையானது அரசாங்க சேவை ஆணைக்குழு மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் நிருவாக நடவடிக்கை கோவை என்பவற்றுக்கு முரணானதெனவும் அந்த சபையினால் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களுக்கான இடமாற்றத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகவும் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ.எல்.முகமட் முக்தார் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment