நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 4 வருடம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று அறிவித்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கருத்து தெரிவித்தார், “நாடாளுமன்ற சட்டத்தின் 66 டி சரத்துக்கு இணங்க, ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாது செய்யப்படுவதாக தெரிவித்துள்ளீர்கள்.
நீங்கள் இந்த தீர்மானத்தை, ரன்ஜன் ராமநாயக்க மூன்று மாதங்களுக்கும் மேல் நாடாளுமன்றுக்கு வருகைத் தராத காரணத்தினால்தான் எடுத்ததாகக் கூறியுள்ளீர்கள்.
நான் மார்ச் 9 ஆம் திகதியன்று சபையில் வைத்து, ரன்ஜன் ராமநாயக்க நாடாளுமன்றுக்கு வருகைத் தராதிருப்பதற்கான அனுமதியை கோரியிருந்தேன்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இதுதொடர்பாக எமக்கு அனுப்பியுள்ள எழுத்து மூலமான கடிதத்தில், இதற்கான அனுமதியை வழங்க முடியாது என்றும் நீதிமன்றத்தை அவமதித்தமையால் நாடாளுமன்றுக்கு அவரை அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.
அதாவது, அவர் நாடாளுமன்றுக்கு வருகைத் தராமல் இருந்து மூன்று மாதங்கள் முடிவடைய, இரண்டு வாரங்களுக்கு முன்னரே நாம் இதற்கான அனுமதியை கோரியிருந்தோம்.
இதற்கு நீங்கள், நீதிமன்றில் இந்த விவகாரம் உள்ளமையால் இதுவிடயம் தொடர்பாக தீர்மானிக்க முடியாது என்று கூறினீர்கள். இந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமையன்று அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
எனினும், இதற்கெதிராக உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யக்கூடிய சூழல் இருக்கும் நிலையில், தற்போது நீங்கள் அவரின் உறுப்புரிமை இரத்தாவதாக அறிவித்துள்ளீர்கள்.
அவர் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து, இதற்கொரு முடிவு வரும்வரை அவருக்கான வாய்பொன்றை வழங்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். இதனை மனிதத் தன்மையுடன் நோக்க வேண்டும்.”
Post a Comment