ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியாக இருக்க வாய்ப்பில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (7) புதன்கிழமை உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை கூறினார்.
இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளதாகவும், அவர் இவ்வாறான கருத்துக்களை கூறி பின்னர் அவற்றை வாபஸ் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பங்கள் உண்டு எனவும் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நௌபர் மௌலவியை விடவும் பிரதான சூத்திரதாரிகள் உள்ளனர் என்பதனை இது தொடர்பாக விசாரணணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
“ஈஸ்டர் தாக்குதல் என்ற திரைப்படத்தின் திரைக்கதை வசனம் வேண்டுமானால் இந்த நௌபர் மௌலவியினதாக இருக்கலாம், பிரதான நடிகர் சஹ்ரானாக இருக்கலாம், சில துணைநடிகர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், ஓர் பெண் நடிகையை சாரா என்ற நடிகையை காணவில்லை எனினும் இந்த திரைப்படத்தை தயாரித்தது யார் இதனை இயக்கியது யார் என்ற கேள்விக்கே விடை தேட வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலிய உளவுப் பிரிவினர் இருந்தார்களா என்ற சந்தேகம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முழு அளவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment