(எம்.எப்.எம்.பஸீர்)
சுமார் 3 வருடங்களாக அரச கைதில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளை, பிணையில் விடுவித்து நியாயமான வழக்கு விசாரணை ஒன்றுக்கான சந்தர்ப்பம் அளிக்கப்படல் வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் கேகாலை மேல் நீதிமன்றில் வாதங்களை முன் வைத்து கோரிக்கை விடுத்துள்ளர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்பகுதியில் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவனெல்லை திதுல்வத்தையிலும் ஏனைய இடங்களிலும் ஐந்து புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பில் 16 பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகள் கடந்த வாரம் இடம்பெற்ற போதே, 1,2,5,12,13,16 ஆம் பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜராகி அவர் இந்த வாதத்தை முன் வைத்துள்ளார்.
இது குறித்த வழக்கு, கடந்த வாரம், கேகாலை மேல் நீதிமன்றில் நீதிபதி ஜகத் கஹந்தகமகே தலைமையிலான ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்திகா காலிங்கவங்ச ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போதே அவர் இந்த வாதத்தை முன் வைத்தார்.
இதன்போது வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர்,
பல சந்தர்ப்பங்களில், பெரும்பான்மையினத்தவர்கள் தொடர்புபட்ட இதனை ஒத்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் சிறுபான்மை முஸ்லிம்கள் தொடர்புபட்ட இந்த சம்பவத்தை மட்டும், அதுவும் மேல் நீதிமன்றின் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் , பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தார்?
பல சம்பவங்கள் இருந்த போதும், நாம் மத வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் 44 சம்பவங்கள் தொடர்பிலான வழக்கின் பட்டியலொன்றினை சமர்ப்பித்துள்ளோம்.
இவற்றில் 20 சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டு நடந்துள்ளன. எனினும் 2018/12/26 இல் திதுல்வத்த புத்தர் சிலை தகர்ப்பு தொடர்பிலான வெறுப்பூட்டும் நடவடிக்கைகளுக்கு முன்னர் அவை இடம்பெற்றுள்ளன. அந்த புத்தர் சிலை தகர்ப்பு நடவடிக்கைக்கு முன்னர் பதிவான 20 சம்பவங்களில் 18 சம்பவங்கள் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலாகும். ஏனைய 2 இல் ஒன்று புத்தர் சிலை தகர்ப்பு சம்பவமும், இந்து கோயில் ஒன்றின் மீதான தாக்குதலுமாகும்.
பட்டியலை பார்க்கும் போது முஸ்லிம் பள்ளிவாசல்கள் 18 மீதான தாக்குதல்கள் தொடர்பில் 60 பெரும்பான்மை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதும், அவர்கள் இந்த வழக்கை போலல்லாது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
அந்த பட்டியலிலேயே ஆரயும் போது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மத வழிபாட்டு பொருட்கள் மற்றும் இடங்கள் மீதான தாக்குதல்கள் 24 பதிவாகியுள்ளன. எனினும் அவை குறித்த விசாரணைகள் எவையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறவோ, அச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்படவோ இல்லை.
அதன்படி இது அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12 (2) ஆகிய உறுப்புரைகளின் கீழ் பாகுபாடு, சட்டத்தின் முன் சமத்துவமின்மை மற்றும் சட்டத்தின் சமமற்ற பாதுகாப்பு தொடர்பில் தெளிவுபடுத்துகிறது.. பிரதிவாதிகளின் உரிமைகளை மறுக்க அனுமதிக்க இந்த நீதிமன்றம் உடன்பட வேண்டியதில்லை. அரசியலமைப்பின் 4 ஆவது உறுப்புரை ஊடாக இந்த நீதிமன்றம் குடிமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க , பாதுகாக்க மற்றும் அதனை தூண்ட பிணைந்துள்ளது.
இந்த பிரதிவாதிகள் 3 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு கூட சம்பவத்தை நேரில் கண்டதாக ஒரு சாட்சி கூட இல்லை. ‘ என வாதிட்டார்.
இதன்போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா, இது, பல நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் சதி செய்தமையுடன் தொடர்புபட்ட ஒரு வழக்கு எனவும் வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ள நிலையில் பிணை கோரிக்கையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்போது 3,4,14 ஆம் பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான சட்டத்தரணி சஷிக பெரேரா குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் குற்றவியல் சட்டக் கோவையின் விதிவிதானங்களுக்கு மாற்றமானது என அடிப்படை ஆட்சேபனை ஒன்றினையும் இதன்போது முன் வைத்தார். அதனால் இந்த குற்றப் பத்திரிகையை முன் கொண்டு செல்ல முடியாது என அவர் வாதிட்டார்.
இந் நிலையில் இது தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம் எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 23 அம் திகதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வழக்குத் தொடுநர் சார்பில் இந்த வழக்கில், அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேரா தலைமையில், சட்டவாதிகளான ஹரீந்ர ஜயசிங்க, உதார கருணாதிலக, சஜின் பண்டார ஆகியோர் ஆஜராகினர்.
1,2,5,12,13,16 ஆம் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தலைமையில் சட்டத்தரணிகளான எம்.சி.எம். முனீர், எம்.ஐ.எம். நளீம், ரிஸ்வான் உவைஸ் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
3,4,14 ஆம் பிரதிவாதிகளுக்காக சட்டத்தரணி முபீனுடன் சட்டத்தரணி சஷிக பெரேரா ஆஜரானார்.
15 ஆம் பிரதிவாதிக்காக சட்டத்தரணி சம்பத் ஹேவாபத்திரணவும் சட்டத்தரணி அவ்தானும் ஆஜராகினர். 9 ஆம் பிரதிவாதிக்கு சட்டத்தரணி துஷாரி வராபிட்டியவுடன் சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் ஆஜரானார். 6,7,8,10 மற்றும் 11 ஆம் பிரதிவாதிகளுக்காக சட்டத்தரணி எம். இம்தியாசுடன் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜராகினார்.
இதனையடுத்து வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியும் மார்ச் மாதம் 2,10,22,31 ஆம் திகதிகளிலும் முன்னெடுக்க நீதிமன்றம் திகதி குறித்தது.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தலை தடுப்பது தொடர்பிலான சர்வதேச இணக்காப்பாட்டு சட்டத்தின் கீழும் 21 குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரு சமூகங்களிடையே மோதலை உருவாக்க சதித் திட்டம் தீட்டியமை, 5 புத்தர் சிலைகளை தகர்த்தமை, சமூகங்கைடையே வெறுப்புணர்வுகளை தூண்டியமை, தோப்பூர் மாவனெல்லை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பகுதியில் அதற்கான வதிவிட கருத்தரங்குகள் மற்றும் ஆயுதப் பயிற்சியினைப் பெற்றமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும், ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்தரங்குகளுக்கு தேவையானவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கியமை தொடர்பில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் முறைப்பாட்டாளர் அறியாதவர்களுடன் இணைந்து பிரதிவாதிகள் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.
இக்குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்களையும், 92 சாட்சியாளர்களின் பட்டியலையும் சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகையில் இணைத்துள்ளார்.
-Vidivelli
Post a Comment