ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்காக பீ.பி. ஜயசுந்தர,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள மிக நீண்ட கடிதத்தில் பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பல சர்ச்சைக்குரிய தகவல்களை ஜயசுந்தர அந்த கடிதத்தில் வெளியிட்டுள்ளார். தான் பதவியில் இருந்த காலத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகளை ஜயசுந்தர கடிதத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளதுடன் சில தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதிக்கு அனுப்பி இந்த பதவி விலகல் கடிதம் ஊடகங்களில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பீ.பி. ஜயசுந்தர ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகினாலும் அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றுவார் என அந்த ஆங்கில ஊடகம் கூறியுள்ளது.
ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள தற்போது பிரதமரின் செயலாளராக கடமையாற்றும் காமினி செனரத், அந்த பதவியில் இருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என கூறப்படுகிறது.
அதேவேளை நிர்வாகத்துறையின் உயர் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சரவையிலும் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என பேசப்படுகிறது.
Post a Comment