Top News

இயற்கை அனர்த்தத்திற்குப் பதிலாக, தாமே உருவாக்கிய பேரழிவினால் நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது அரசாங்கம் - சஜித் சாடல்



தற்போதைய அரசாங்கம் இயற்கை அனர்த்தத்திற்குப் பதிலாக, தாங்களே உருவாக்கிய பேரழிவைக் கொண்டு நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் இன்று "உழவுப் போர்" பற்றி பேசினாலும், நாட்டில் “பஞ்ச யுத்தம்” ஏற்பட்டுள்ளது. தன்னிச்சையான முடிவுகளின் காரணமாக நாட்டின் விவசாயத்தை அழித்த அரசாங்கம், வீடு வீடாக எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் நாடாக இந்நாட்டை மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.


சில அமைச்சர்கள் மக்களுக்கு நிவாரணப் பொதி கொடுப்போம் என்று தம்பட்டம் அடித்தாலும், மனச்சோர்வு, பணவீக்கம், துக்கம், கண்ணீர் மற்றும் வலி ஆகியவை மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரே நிவாரணப் பொதி என்றும் தெரிவித்தார்.


17 வருடங்களுக்கு முன்னர் இயற்கை அனர்த்தமாக வந்த சுனாமி அனர்த்தம் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்து விட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அரசாங்கம் இயற்கை அனர்த்தத்திற்குப் பதிலாக, தாங்களே உருவாக்கிய பேரழிவைக் கொண்டு நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


அன்று இயற்கை சுனாமியில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்றும், இன்று 'பொஹொட்டு சுனாமி'யால் முழு நாட்டு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


நாட்டில் நடந்து கொண்டிருப்பது வெள்ளை டை கொள்ளை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தமக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கோ மக்களுடனான டீல் மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) ஹம்பாந்தோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள சந்தைப் பகுதிகளுக்குச் சென்று 'மனிதாபிமானத்தின் பயணம்' எனும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்ததோடு இந் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


நகரத்திற்கும் சந்தைக்கும் வந்திருந்த மக்கள் மற்றும் வியாபாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு,நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தயாரிக்கப்பட்ட "குடும்ப ஆட்சியே, நாட்டின் அழிவு" என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரத்தையும் அவர்களிடையே விநியோகித்தார்.

Post a Comment

Previous Post Next Post