பாதிக்கப்பட்ட நெற் பயிர்ச் செய்கையாளர்களுக்கு மாத்திரம் நட்டஈடு : 40 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடு என்கிறார் மஹிந்தானந்த
January 26, 2022
0
(இராஜதுரை ஹஷான்)
2021 - 2022 பெரும்போகத்தில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு விளைச்சலில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மாத்திரம் முதற்கட்டமாக நட்டஈடு வழங்கப்படும். அத்துடன் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கான உத்தரவாத விலை 75 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலைபேறான விவசாய கொள்கையினை நிலைப்படுத்த அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள தயாராகவுள்ளேன் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நிலைபேறான விவசாய கொள்கையினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நல்ல திட்டங்களுக்கு எதிராக ஒரு தரப்பினர் வழமையாக செயற்படுவதை போன்று சேதன பசளை திட்டத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பெரும்போக விவசாயத்தில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்ட விவசாயிகள் தாம் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப் பெறவில்லை என கருதும் பட்சத்தில் அவர்களுக்கு நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க 40 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
சேதன பசளையினை பயன்படுத்தி 8 இலட்சம் ஹேக்கர் நிலப்பரப்பில் நெற் பயிர்ச் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. 10 இலட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறை அமைச்சினால் வழங்கப்பட்ட 4 வகையான சேதன பசளை மற்றும் சேதன திரவ உரம் ஆகியவற்றை மாத்திரம் பயன்படுத்தியவர்களுக்கு மாத்திரம் நட்டஈடு வழங்கப்படும் என்ற வரையறை கிடையாது. நெற் பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நட்டஈடு வழங்கப்படும்.
சோளம் மற்றும் மரக்கறி ஆகிய பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான உரம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலனா விவசாயிகள் இதர பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஆகவே நெற் பயிர்ச் செய்கைக்கு மாத்திரம் முதற்கட்டமாக நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Share to other apps