நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை இன்றைய தினத்திற்குள் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் வழங்காவிட்டால் இந்நிலை ஏற்படுமென அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் மின்சார தேவையில் 70 சதவீதமான உற்பத்தி அனல் மின்நிலையங்கள் ஊடாகவே பூர்த்தி செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
22 சதவீத மின்சாரம் நீர் மின் உற்பத்தி ஊடாக விநியோகிக்கப்படுகின்றது என்றும் சகல மின் உற்பத்தி நிலையங்களும் டீசல் மூலமே இயங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், களனிதிஸ்ஸயில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையம் மாத்திரம் டீசலுக்கு மேலதிகமாக, நெப்டாவை பயன்படுத்தி இயக்க முடியும் என்றும் நெப்டா தற்போது முழுமையாக தீர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளதென்றும் அதன்பின்னர், 3 ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சப்புகஸ்கந்தை நிலையத்திற்கான எரிபொருள் இன்று நண்பகலுடன் தீர்ந்துவிடும் என்றும் இதனால் மேலும் 168 மெகாவோட் மின்சாரத்தை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை ஏற்படுத்த நேரிடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின்சார பொறியியலாளர்கள் சங்கம் இன்று காலை முதல் சுயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment