கூட்டாக இணைந்து திருடுவதே ஆட்சியாளர்களின் பொதுக்கொள்கையாக அமைந்துள்ளது என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 73 ஆண்டுகளாக ஆட்சியாளர்களின் பொதுக்கொள்கை கூட்டாக இணைந்து திருடுவது மட்டுமேயாகும். பிணை முறி மோசடிகள் தொடர்பில் நான் கோப் குழு ஊடாக விசாரணை செய்தேன்.
ரணிலின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்தேன். இந்த விசாரணைகள் நடாத்தப்படும் போது இதனுடன் தொடர்புடையவர்கள் யார் தெரியுமா முன்னைய ஆட்சியாளர்கள்.
பிணைமுறி மோசடி விசாரணைகளின் போது ரணில் தரப்புக்கு முன்னர் ஆட்சி செய்த மஹிந்த தரப்பின் அஜித் நிவாட் கப்ரால் போன்றோர் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றன.
இவ்வாறு ஒரு பிரச்சினை பற்றி விசாரணை நடாத்தும் போது அதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் தவறுகள் அம்பலமாகின்றது.
அனைவரும் நல்ல நண்பர்கள், எந்த விடயத்தைப் பற்றி விசாரணை செய்தாலும் அனைவரும் அதில் தொடர்புப்பட்டிருக்கின்றனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவை கோடிக்கணக்கில் நட்டமடைந்திருந்தது. ஒரு தரப்பினர் எயார்பஸ்களை விற்பனை செய்துள்ளனர்.பின்னர் ஆட்சி செய்த ரணில் தரப்பினர் அதனை கொள்வனவு செய்து மோசடி செய்துள்ளனர்.
திருடுவதில் இவர்களுக்கு எவ்வித பேதமும் இல்லை, அதற்காக இவர்கள் பொதுக்கொள்கையொன்றை வகுத்துக் கொண்டுள்ளனர் என சுனில் ஹந்துனெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment