உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை சிங்கள மொழியில் காணப்பட்டமையினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளது.
குறித்த குற்றப் பத்திரிகையினை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்தின் கையெழுத்துடன் அவர் சார்பாக அரச சட்டவாதியினால் கல்முனை மேல் நீதிமன்றில் நேற்று (10) தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய குற்றப் பகிர்வுப் பத்திரமானது கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் குற்றப் பத்திரமானது சிங்கள மொழியில் காணப்பட்டமையினால் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேகநபர் தமிழ் பேசும் ஒருவராக இருப்பதனால் குற்றப் பத்திரத்தில் உள்ள சகல விடயங்களையும் தமிழ் மொழியில் மாற்றி வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு குறித்த வழக்கினை ஆராய்ந்த நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி இவ் வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதன்போது ஸஹ்ரானின் மனைவியான பிரதிவாதி பாத்திமா ஹாதியா பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.
(பாறுக் ஷிஹான்)
Post a Comment