நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், பெரும்பான்மையான மக்கள் சுகாதார விதிமுறைகளை கவனமாகக் கடைப்பிடித்து வந்தாலும், சிலர் இந்த வழிகாட்டுதல்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்றும் இது வழக்கு எண்ணிக்கையில் மற்றொரு எழுச்சிக்கு வழிவகுத்தது என்றும் கூறினார்.
அடுத்த இரண்டு வாரங்களில் பதிவாகும் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை இன்றைய நடத்தையைப் பொறுத்தே அமையும் என்பதால், பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை 22 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் தொழில்நுட்ப சேவை இயக்குனர் வைத்தியர் அன்வர் ஹம்தானி, கொரோனா இறப்பு எண்ணிக்கையும் 5% உயர்ந்துள்ளதாக கூறுகிறார்.
Post a Comment