பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி ; யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அமைச்சர் உறுதி!
January 26, 2022
0
சிறுவர்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு தரமான குடிநீரை தொடர்ந்து எமது சிறுவர்களுக்கு விநியோகிக்க தேவையான அறிவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தலையிடுமாறு யுனிசெப் நிறுவனத்திடம் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான புதிய பிரதிநிதி கிரிஸ்டியன் குக் நேற்று நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை நீர் வழங்கல் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன் போது ஆரம்ப பிரிவு மாணவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
உலக நாடுகள் பலவற்றில் சுத்தமான குடிநீர் கிடைக்காதமையினால் பல்வேறு நோய்களினால் சிறுவர்கள் பீடிக்கப்பட்டுள்ளதாக புதிதாக வெளியிடப்பட்ட சுகாதார ஆவணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கூட கஷ்ட பிரதேசங்களில் இவ்வாறான நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்கு துரித தீர்வினை வழங்கும் நோக்கில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் ஊடாக விசேட வேலைத்திட்டங்கள் பல தற்போதைக்கு செயற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எடுத்துரைத்தார்.
விசேடமாக இவ்வாறான நோய் பரவல் உள்ள பிரதேசங்களில் குடிநீர் மீள் சுத்திகரிப்பு இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பல பிரதேசங்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக குறித்த இயந்திரங்கள் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி கிறிஸ்டியன் குக் குறிப்பிடுகையில்,
குடிநீரின் தரம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் கணிப்பொன்றை செய்வதோடு நிலத்தடி நீரின் தன்மை தொடர்பாகவும் புள்ளிவிபரங்களை தயாரிக்குமாறும் விசேடமாக பாடசாலை வளாக குடிநீரின் தரத்தை அதிகரிக்க யுனிசெப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share to other apps