Top News

மேலும்இரண்டரை நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவை இல்லை- இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் !





தற்போதைய நிலையின் கீழ் மேலும் இரண்டரை நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவை இல்லை என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம், களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான உலை எண்ணெய் மற்றும் டீசல் என்பன தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

மின்சாரத்தை துண்டிக்காதிருப்பதற்கு ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் மாலபே, பாணந்துரை, மஹரகம மற்றும் கனேமுல்ல உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார துண்டிப்புக்காக இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய பொது பயன்பாட்டு ஆணைக்குழு இன்று தமது பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.

தேவை ஏற்படின் மூன்று கட்டங்களாக மின்சாரத்தை துண்டிப்பதற்கான அனுமதியை பெற்று தருமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும் தற்போது வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களுக்கு அமைய மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவை இல்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை மின்சார துண்டிப்பு தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

துண்டிப்பின்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post