Top News

டொலர்கள் இன்றி மின்சாரத்திற்கு எரிபொருளை வழங்க முடியாது – கம்மன்பில





டொலர்கள் இன்றி எரிபொருளை வழங்க முடியாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால் மட்டுமே மசகு எண்ணெயை இறக்குமதி செய்து வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால், வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் இல்லாவிட்டால் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமென்றும் வாகன சாரதிகளால் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்றும் எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலங்கை மின்சார சபை தேவையான டொலர்களை வழங்கினால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்கத் தயாராக இருப்பதாகவும் மின்சார சபை தாங்களாகவே நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்யவும் முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலையிலேயே, எரிசக்தி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post