பொது மக்களுக்காக நேற்றைய தினம் வழங்கப்பட்ட விசேட சலுகைக்காக அரசாங்கத்தினால் 229 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த சலுகைகளின் அடிப்படையில் இம்மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 5,000 ரூபாவை மாதாந்த மேலதிக கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்த கொடுப்பனவை இம்மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு மட்டும் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், நெல் விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு 25 ரூபா என்றதன் அடிப்படையில் மானியமும், தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ஒரு கிலோ கோதுமை மா மாதாந்தம் 80 ரூபா சலுகை விலையிலும் அதிகபட்ச வரம்பிற்கு உட்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஹோமாகமவில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட வர்த்தக அமைச்சர் இது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையில், அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தனக்கு நல்ல அமைச்சுப் பதவி கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
Post a Comment