துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை 7 நாட்களுக்குள் விடுவிக்காதவிடத்து அபாராத தொகையை அறவிடும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்துமாறு அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு அதிக காலம் கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருப்பதாக அத்தியாவசியப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்குக் காரணம் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், இதுவரையில் உரியத் தீர்வு கிடைக்கப்பெறவில்லையென அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
7 நாட்களுக்கு கொள்கலன்கள் அகற்றப்படாவிட்டால் தாமதக் கட்டணத்திற்கு மேலதிகமாக இந்த அபராத தொகை துறைமுக அதிகார சபையினால் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.