2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 07ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்விலேயே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, பரீட்சைக் காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என, நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெறவிருந்த பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சின் பணிப்புரையின் பேரில் பரீட்சைகள் ஆணையாளர் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பரீட்சை மற்றும் பெறுபேறுகளுக்கு இடைப்பட்ட காலத்தை குறைப்பதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதில் ஏற்படும் தாமதங்கள் தடுக்கப்பட்டால், பிள்ளைகளின் கல்விக்காக சுமார் ஒரு வருட கால அவகாசத்தை மீளப் பெற முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
Post a Comment