பொரளை அனைத்து பரிசுத்தவான்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை பிறிதொரு தரப்பின் மீது சுமத்திவிட்டு, அதிலிருந்து நழுவிச் செல்ல அரசாங்கம் மற்றும் காவல்துறையினருக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் தாக்குதல் மற்றும் தேவாலய கைக்குண்டு சம்பவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இந்த சம்பவத்தின் உண்மைதன்மை வெளிவரும் வரை இந்த அரசுக்கு எதிராக நாம் போராடுவோம். ஏனென்றால் இந்த அரசும், காவல்துறையும் ஆடும் நாடகம் எமக்கு தெளிவாக தெரிகிறது.
அதனால் தான் காலையிலிருந்து குறித்த காட்சிகளை பார்வையிடுமாறு எங்களது அருட்தந்தைமார்களிடம் கூறினேன். அப்போது வெடிகுண்டை வேறு எவரும் கொண்டுவந்தனரா என்பதை கண்டுபிடிக்க முடிந்தது. எனினும், தற்போது 'முனி' என்ற நபரை இதில் சிக்க வைத்துக் காவல்துறை கைக் கழுவ முயற்சித்தது.
மனச்சாட்சி உள்ள எவரொருவராலும் அவ்வாறு செய்வதற்கு இடமளிக்க முடியாது. எனவே, இந்த விடயத்திலிருந்து அரசாங்கம், காவல்துறையினரை நழுவிச் செல்லவிடமாட்டோம். எமக்கு நீதிமன்ற இருக்கிறது. அதனை நாம் நம்புகிறோம். எனவே, தற்போதைய பிழைகள் நீதிமன்றில் சரிசெய்யப்பட வேண்டும்.
இவர்தான் இதனை செய்துள்ளார் என காவல்துறை அமைச்சர் மிகவும் விரைவாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். எங்கோ வைத்தியசாலை குண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டை அந்த நபர் மீது சுமத்தப்பட்டது. மக்களை அடித்து, அச்சுறுத்திய நிலைநாட்டப்படும் நீதியை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாம் நிராகரிப்போம். எனவே, இந்த நபருக்கும், ஏனைய மூவருக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாம் முன்வருவதற்கு தீர்மானித்துள்ளோம்" என்றார்.
Post a Comment